காவலரை பணியிட மாற்றம் செய்ய மக்கள் எதிர்ப்பு! அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?
thirunelakkudi inspecter arulkumar
திருநீலக்குடி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் அருள்குமார் பணி இடமாற்றத்திற்கு சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது ஒரு அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் தங்களின் மனங்கவர்ந்த ஆசிரியர்களின் பணியிட மாற்றத்திற்கு தான் மாணவ, மாணவிகள் தான் எதிர்ப்பு தெரிவித்து வருவார்கள். ஆனால் முதல்முறையாக காவல் உதவி ஆய்வாளரின் பணியிட மாற்றத்திற்கு திருநீலக்குடி பகுதியே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள திருநீலக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் அருள்குமார். இவர் அப்பகுதியில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனம் கவர்ந்த அதிகாரியாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக டெல்டா மாவட்டமான அப்பகுதியில் நடைபெற்று வந்த மணல் கொள்ளையை துணிவோடு எதிர்த்து தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும் அருகிலுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரும் மதுபான வகைகளை தடை செய்து அப்பகுதி முழுவதும் மதுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதனால் அங்கு உள்ள தாய்மார்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். மேலும் பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து தீர்த்து வைத்துள்ளார். இதனால் அவரின் பணி இடமாற்றத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் கிராம இளைஞர்களிடையே மணல் கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் காரைக்கால் மது வகைகள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதனால் மக்கள் சமாதானமடைந்து தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.