கட்டை விரல் காயத்தால் சிக்கிய குற்றவாளி.. கொள்ளை சம்பவத்தில் விரலை கடித்த பெண்ணால் சிக்கிய இளைஞர்கள்.!
கட்டை விரல் காயத்தால் சிக்கிய குற்றவாளி.. கொள்ளை சம்பவத்தில் விரலை கடித்த பெண்ணால் சிக்கிய இளைஞர்கள்.!
வீட்டில் பெண் தனியாக இருப்பதை உறுதி செய்து திருட்டு செயலில் ஈடுபட்ட இளைஞரின் கைவிரலை பெண் கடித்ததால், அதுவே குற்றவாளியை கைது செய்ய முக்கிய தடயமான சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம், ஆரணி மல்லியங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் உதயகுமார். இவர் காய்கறி வியாபாரி ஆவார். ஆரணி பகுதியில் காய்கறிகளை வாங்கி சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதிகளில் விற்பனை செய்வது வழக்கம். இவரின் மனைவி மாலதி. தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.
கடந்த 23ம் தேதியில் உதயகுமார் வியாபாரத்திற்காக சென்னை சென்றிருக்கவே, அவரின் 2 மகள்களும் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் மாலதி தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள், வீட்டின் பின்புறம் வழியே மாடிக்கு சென்று முகமூடி அணிந்து வீட்டிற்குள் வந்துள்ளனர். மாலதியிடம் கத்தி முனையில் பீரோ சாவி கேட்க, அவர் கொடுக்க மறுத்து கொள்ளையனின் கட்டை விரலை கடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன் மாலதியை சரமாரியாக வெட்டி, கை-கால்களை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த ரூ.16.5 சவரன் நகைகள், ரூ.1.50 இலட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். மாலதி படுகாயத்தோடு உயிருக்கு அலறித்துடிக்க, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆரணி காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணைக்கு பின்னர் இருசக்கர வாகனத்தின் பதிவெண் கொண்டு நடந்த ஆய்வில், அதே பகுதியை சேர்ந்த அருண் குமார் (வயது 22), ஜெய்பீ (வயது 24) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரிடம் நடந்த விசாரணையில் கொள்ளை சம்பவம் அம்பலமானது.
இவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் 16.5 சவரன் நகைகள், ரூ.1.5 இலட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மாலதி குற்றவாளியின் கட்டை விரலை கடித்தது விசாரணைக்கு பெரிதும் உதவி செய்து குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட்டனர்.