இல்லாத நகைக்கு கடன் கொடுத்து மோசடி, 450 சவரன் நகைகள் ஏப்பம்.. கூட்டுறவு சங்கத்தில் பகீர்.!
இல்லாத நகைக்கு கடன் கொடுத்து மோசடி, 450 சவரன் நகைகள் ஏப்பம்.. கூட்டுறவு சங்கத்தில் பகீர்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்கரும்புதூர் கிராமத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 3,800 உறுப்பினர்கள் இருக்கின்றனர். கூட்டுறவு சங்கத்திற்கு அதிமுக கட்சியை சேர்ந்த மோகன் தலைவராக இருந்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின் போது அரசின் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன், கரும்பு பயிர்க்கடன் போன்றவற்றில் ரூ.8 கோடி வரை சங்க ஊழியர்கள் மோசடி செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நபர்களுக்கு கூட தெரியாமல் நகைக்கடன், பயிர்க்கடன், விவசாய கடன், மகளிர் சுயஉதவி கடன் போன்றவற்றை பெற்றுள்ளதாக போலி ரசீது தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 100 க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் நகைக்கடன் வழங்குகிறோம் என்று கூறி நகையை வாங்கி பணம் கொடுக்காமல், வங்கியில் பணம் செலுத்தப்படும் என்று ஒரு வருடமாக இழுத்தடித்து வந்த அதிகாரிகள், கொடுக்காத பணத்தை கொடுத்ததாக கூறி பணத்திற்கு வட்டிகட்ட சொல்லி சம்மன் வழங்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள், வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது. மேலும், பணியில் இருந்த அதிகாரிகள் முறையாக கடனை பெற்று வட்டி செலுத்தி வரும் மக்களிடம், உங்களின் நகை ஏலம் போய்விட்டது என்றும் கூறி இருக்கின்றனர். சிலரிடம் உனது நகை வராது என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக ஏற்கனவே உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை என்று தெரிவிக்கும் மக்கள், மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர். மேலும், மொத்தமாக 450 சவரன் நகைகள் அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி அவர்களே பணத்தை எடுத்து மக்கள் தலையில் கடனை சுடுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கின்றனர்.