டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் பதுங்கியிருந்த சித்தாண்டி கைது!
Tnpsc issue sithandi arrest
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2017-ம் ஆண்டு நடத்திய குரூப்- 2 ஏ தேர்வில் ராமேசுவரம் மையத்தில் எழுதிய 42 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு அதிக மதிப்பெண்கள் பெற்றதாக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசுதுறைகளை சேர்ந்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 14 பேரும், குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் 4, குரூப் 2 A முறைகேடு வழக்குகளிலும் தொடர்புடைய சென்னை முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள். சமீபத்தில் அவரைப்பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். இதனையடுத்து ஜெயக்குமாரின் வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி போலீசார் முடக்கினர். அதேபோல் சித்தாண்டி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
சித்தாண்டியையும் போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம்- சிவகங்கை சாலையில் உள்ள வயல் ஒன்றில் குடிசையில் தங்கியிருந்த சித்தாண்டியை கைது செய்தனர். பிறகு அவர், விசாரணைக்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.