ஒட்டுமொத்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று!
Today is Abdul Kalam Memorial Day
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல ஆற்றல்களை கொண்டவராக விளங்கியவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மாணவர் நலன், கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர். மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என கூறியவர். குழந்தைகளை கண்டால் அவர்களுடன்தான் முதலில் பேசுவார். நகைச்சுவை உணர்வு அவருக்கு மிகவும் அதிகம். குழந்தைகளுடன் சிரித்து விளையாடும் குணம் கொண்டவர். விளையாட்டு, கலாசாரம், அரசியல் உள்பட அனைத்து துறைகளிலும் அவர் கவனம் செலுத்துபவர்.
உலகத்திலேயே தலை சிறந்ததைச் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் நம் இந்தியர்கள். பிரபஞ்சத்தில் வேறு எந்த நாட்டிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு தனித்தன்மை, பளிச்சிடும் நம்பிக்கை மற்றும் ஆற்றல் இணைந்த ஓர் அற்புதமான சங்கமச் சக்தி கொண்டவர்கள் இந்தியர்கள். இந்திய மக்களின் ஆற்றல்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. நமக்குத் தேவையான நிறைய வளங்கள் நம்மிடம் உள்ளன. நமது குறிக்கோள்களில் நாம் முழு நம்பிக்கை வைக்கும்போது, நமது கனவு நனவாகும். அடுத்தடுத்த வெற்றிகளும் தொடரும் என கூறியவர்.
ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் ரோல் மாடலாக விளங்கி வந்த அப்துல்கலாம் 2015 சூலை 27 ம் தேதி மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோதே உடல்நலம் பாதித்து மரணமடைந்தார். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவே உழைத்து இந்தியாவின் கவுரவத்தை நிலைநாட்டிய கலாமின் மறைவு ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நாளில் அவரது நினைவை போற்றும் வகையில் நினைவு அஞ்சலியை செலுத்துவோம்.