இறந்த நண்பனின் உடலை கிரிக்கெட் மைதானத்திற்குள் கொண்டுவந்து மூன்றுமுறை சுற்றிய இளைஞர் பட்டாளம்!
Tribute to the body of the young man in stadium
தஞ்சாவூர் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் அழகப்பன். 26 வயது நிரம்பிய இவர் கிரிக்கெட் மீது தீவிர பற்று கொண்டவர், அரண்மனை அருகில் உள்ள பீட்டர் மைதானத்தில், தினமும் காலை, மாலை, நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வருவதை வழக்கமாக வைத்திருப்பவர் அழகப்பன். இவர் பல்வேறு உள்ளூர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, வெற்றியும் பெற்றுள்ளார்.
இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருடைய காதல் தோல்வியில் முடிந்ததால், சில நாட்களாகவே சோகமாக இருந்து வந்துள்ளார் அழகப்பன். இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென அழகப்பன் எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். அவருடைய உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரும்போதே ஏராளமான இளைஞர் பட்டாளம் கூடினர். இந்தநிலையில் கிரிக்கெட் மைதானம் அருகே அம்புலன்ஸ் வந்ததும், ஆம்புலன்ஸை மைதானத்திற்குள் விடுமாறு கூறியுள்ளனர். மைதானத்தை மூன்று முறை சுற்றியதும், நடுப்பகுதியில் சிறிது நேரம் நிறுத்தி வைத்து அனைவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
பின்னர் இளைஞர் பட்டாளமும் சேர்ந்து அழகப்பனின் உடலை ஊர்வலமாக தூக்கிக்கொண்டு இறுதிச்சடங்கினை முடித்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறுதிச்சடங்கில் இளைஞர்களின் செயல் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.