ஆட்டோ பயணியின் கையில் இருந்த சந்தேக பை! ஆட்டோ ஓட்டுநர் எடுத்த அதிரடி முடிவு.
Trichy atm robbery
பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுக்கட்டாக பணம் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த சந்தேகத்திற்கு இடமான நபரை ஆட்டோ ஓட்டுனர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ரோவர் ஆர்ஜ் பகுதியை சேர்ந்தவர் முருகையா. ஆட்டோ ஓட்டுநரான இவரது ஆட்டோவில் குடிபோதையில் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவர் எறியுள்ளார். குடிபோதையில் இருந்த அந்த நபர் பெரம்பலூரில் உள்ள பிரபல தங்கும் விடுதி ஒன்றுக்கு செல்லுமாறு ஆட்டோ ஓட்டுனரிடம் கூறியுள்ளார்.
ஆட்டோவும் அங்கு செல்ல, அந்த நபர் குடிபோதையில் இருந்ததால் தங்கும் விடுதியில் அறை தர மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நபர் ஆட்டோவை மற்றொரு தங்கும் விடுதிக்கு செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அங்கும் அந்த நபருக்கு அறை தர மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபர் மீது ஆட்டோ ஓட்டுனருக்கு சந்தேகம் எழ அவர் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளார். அதில் கட்டு கட்டாக பணம் இருப்பதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் முருகையா அந்த நபரிடம் தான் வேறு ஒரு இடத்தில் அறை எடுத்து தருவதாக கூறி அங்கே அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த நபரும் முருகையாவின் பேச்சை நம்பி ஆட்டோவில் ஏற, முருகையா ஆட்டோவை நேராக பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். நடந்த சம்பவங்களை போலீசாரிடம் முருகையா கூற அந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.
போலீசாரின் சோதனையில் அந்த நபர் திருச்சியை சேர்ந்த ஸ்டீபன் என்பதும் இதற்கு முன்னர் அவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்து உள்ளது. மேலும் 100 ரூபாய் 500 ரூபாய் கட்டுகளாக சுமார் 13 லட்சம் ரூபாயை போலீசார் அவனிடம் இருந்து கைப்பற்றினர்.
இந்த பணம் எப்படி வந்தது என்று கேள்விக்கு முதலில் தனது வீட்டை விற்ற பணம் என ஸ்டீபன் கூற போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கையில் வைத்திருந்த பணம் திருச்சி சிட்டி யூனியன் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஏடிஎம்மில் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை ஸ்டீபன் கொள்ளையடித்தது போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சமயோசிதமாக செயல்பட்டு ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையனை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.