பள்ளி வளாகத்தில் 10ம் வகுப்பு மாணவர் அடித்தே கொலை; 3 மாணவர்களின் கொலைவெறித்தாக்குதல்.. திருச்சியில் பயங்கரம்.!
பள்ளி வளாகத்தில் 10ம் வகுப்பு மாணவர் அடித்தே கொலை; 3 மாணவர்களின் கொலைவெறித்தாக்குதல்.. திருச்சியில் பயங்கரம்.!
சிறிய கற்களை தூக்கி எறிந்து சிறார்களிடையே நடந்த தகராறு, இறுதியில் 15 வயது மாணவரின் உயிரை பறித்தது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம், பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். கோபியின் மகன் மௌலீஸ்வரன் (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற நிலையில், 10ம் வகுப்பு மாணவ - மாணவிகள் பள்ளியின் வளாகத்தில் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தனர். அந்த சமயம் சிறுகற்களை தூக்கிப்போட்டு விளையாடியதாக தெரியவருகிறது. அப்போது தகராறு ஏற்பட்டு மௌலீஸ்வரனை அவதூறான வார்த்தைகள் பேசி இருக்கின்றனர். இதனால் தகராறு ஏற்பட்டு 3 மாணவர்கள் மௌலீஸ்வரனை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் மீட்கப்பட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியில் போராட்டம் நடத்தினர்.
அதுமட்டுமல்லாது திருச்சி - நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட, காவல்துறையினர் களத்தில் இறங்கி விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களை கைது செய்த அதிகாரிகள், இன்று அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.