உலகமகா யோக்கிய சிகாமணி மு.க.ஸ்டாலின், ஆ.ராசா.! வச்சு செய்த டி.டி.வி.தினகரன்.!
டிடிவி தினகரன் சரமாரியாக திமுகவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி ஆ.ராசா, ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் 2 ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் சென்னை கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்க நான் தயார். முதலமைச்சர் தயாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் குற்றவாளி என பேசியிருந்தார். இந்தநிலையில் டிடிவி தினகரன் சரமாரியாக திமுகவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "நாகரிக அரசியலுக்கும், திமுகவுக்கும் எந்த காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை என்பதை திரு மு.க ஸ்டாலினும், திரு.ஆ.ராசாவும் கடந்த சில நாட்களாக மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். தமிழ் நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைத்த பல ஊழல்களில் ஊற்றுக்கண்ணான, ஊழலின் பிதாமகரான கருணாநிதியின் வாரிசுகள் அவர்களைப் பற்றி உலகமே அறிந்த சங்கதிகளை வீராவேசமாக பேசுவதால் மட்டுமே மறைத்துவிட முடியும் என நினைக்கிறார்கள்.
அவர்களுடைய கட்சிக்காரர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுக்க வாழ்கிற ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் 2ஜி ஊழல் மூலம் பெரும் தலைகுனிவை, அவமானத்தை ஏற்படுத்திய இந்த 'விஞ்ஞான ஊழல்வாதிகள்', தங்கள் சுயலாபத்திற்காக தமிழகத்திற்கு செய்த தீமைகள் கொஞ்ச..நஞ்சமா? ஒவ்வொரு காலத்திலும் தாங்கள் புரிந்த ஊழல்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காவு கொடுத்தது இந்த கருணாநிதி கூட்டம்தானே?
சர்க்காரியாவில் இருந்து தப்பிக்க கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது யார்? 2-ஜியில் இருந்து தப்பிக்க லட்சோப லட்சம் தமிழ் சொந்தங்களை இலங்கையில் கொன்றழிக்க துணை நின்றது யார்? இப்படி ஊழல், நயவஞ்சகம் இவற்றின் மொத்த வடிவங்களான இவர்களுக்கு தமிழக மக்களுக்காக தவ வாழ்க்கை வாழ்ந்து, இன்றும் அவர்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கிற புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டால் திரு.ஸ்டாலின் இனி கைத்தடிகளைத் தூண்டிவிட்டு இப்படியெல்லாம் பேச வைப்பார். அம்மா அவர்களை கொச்சைப்படுத்தும் இந்த உலக மகா யோக்கியசிகாமணிகள், அவர்களின் மரணத்தைப் பற்றியும் வழக்கம்போல 'ரொம்பவும் அக்கறை உள்ளவர்கள்' போன்று அவதூறு பரப்பி குளிர்காய நினைப்பார்கள். இவர்களின் மலிவான பிதற்றல்களைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
இதுபோன்று வரம்புமீறி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாலும், அதிகாரத்தில் இருக்கும்போது போட்ட ஆட்டங்களாலும்தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தீயசக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். வரவிருக்கிற சட்டமன்ற தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. அம்மா அவர்கள் இல்லை என்பதால் இப்போதே ஆட்சியைப் பிடித்துவிட்டதாக நினைத்து கற்பனை ராஜ்ஜியத்தில் மிதக்கும் இவர்களின் கனவு ஒருநாளும் பலிக்கப் போவதில்லை.
அதிர்ஷ்டத்தால் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு, நாளைக்கு அடையாளம் இல்லாமல் போகப் போகிறவர்கள் வேண்டுமானால் இவர்களின் எகத்தாளத்தையும், இழிச்சொற்களையும் கண்டும் காணாமலும் இருக்கலாம். ஏனெனினில், அம்மாவை அசிங்கப்படுத்தும் இந்த தீய சக்திகளோடு 60:40 ஒப்பந்தம் போட்டு செயல்படுபவர்கள், 'நீ அடிப்பது போல அடி; நான் அழுவது போல அழுகிறேன்' என்று பேசி வைத்துகொண்டே இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
ஆனால் தீயசக்தி கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உண்மையான பிள்ளைகளான அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களாகிய நாங்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். அதனால் திரு.ஸ்டாலினும், திரு.ராசா போன்றவர்களும் பேசுவதற்கு முன் யோசித்து நாகரீகமாக பேசுவது நல்லது என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.