இது ஆரம்பம்தான்..! இனி ஒவ்வொன்றாக வெளியில் வரும்! டிடிவி தினகரன் அதிரடி!
ttv dhinakaran talk about bharatnettenders
பாரத் நெட் இணைய சேவை மூலம் தமிழ்நாட்டில் 55,000 கி.மீ தொலைவுக்கு ஆப்டிக்கல் பைபர் கேபிள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.1,950 கோடி நிதி ஒதுக்கியிருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களுக்கு பிராட்பேண்ட் தொடர்பை உருவாக்குவதே இதன் நோக்கம்.
இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தரைவழி ஆப்டிகல் பைபர் கேபிள் வசதியை 55,000 கி,மீ தொலைவுக்குச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் 12,524 கிராம ஊராட்சிகளுக்கு ஒரு வினாடிக்கு ஒரு ஜி.பி. அளவு வேகத்துடன் கூடிய இணைய வசதி கிடைக்கவிருந்தது.
இந்தநிலையில், ரூ.1950 கோடி மதிப்புள்ள இந்த பாரத்நெட் திட்டத்துக்கு டெண்டர் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக அரசின் உயர்மட்டத்தில் உள்ள சிலருக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு இந்த டெண்டர் கிடைப்பதற்காக பாரத்நெட் டெண்டரில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக முதலமைச்சர், தலைமை செயலாளர், மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் மற்றும் மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை கடந்த 23-ந்தேதி காணொலி காட்சி மூலம் விசாரித்தது. இந்தநிலையில்,தமிழகத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் என்கிற பாரத் இணைய சேவை திட்டத்தின் டெண்டரை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.
இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் கிராம ஊராட்சிகளை இண்டர்நெட் மூலம் இணைப்பதற்காக ரூ.1,950 கோடிக்கு பழனிசாமி அரசு வெளியிட்டிருந்த பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் மத்திய அரசு அந்த டெண்டரை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்காக இந்த டெண்டர் விதிமுறைகளை பழனிசாமி அரசு சட்ட விரோதமான முறையில் மாற்றியதாக பல்வேறு தரப்பினரும் எழுப்பிய குற்றச்சாட்டுகள் இதன் மூலம் உண்மையாகியிருக்கின்றன.
இது ஆரம்பம்தான்..! துறைகள் தோறும் பங்காளிகள், சம்பந்திகள் எனச் சுற்றத்திற்காக இஷ்டம் போல வாரி வழங்கப்பட்ட டெண்டர்களில் உள்ள முறைகேடுகள் இனி ஒவ்வொன்றாக வெளியில் வரும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.