×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருது சகோதரர்களை போலவே துரோகத்தை வேரறுத்து தீயவற்றை வீழ்த்தி வென்று காட்டுவோம்.! டிடிவி தினகரன்.!

தமிழர் வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளங்களான மாவீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜை நாளில் மருது பாண்டியரைப் போற்றுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கிய முன்னோடிகள் மருதுசகோதரர்கள். இவர்கள் ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் உள்ளது. மருது சகோதரர்களுக்கு குருபூஜை விழா அக்டோபர் 27 ஆம் தேதி ஆண்டுதோறும் நடைபெறும். இந்தநிலையில் மருது சகோதரர்களின் குருபூஜை தினத்தை முன்னிட்டு டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தமிழர் வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளங்களான  மாவீரர்கள் மருது சகோதரர்கள் மண்ணில் விதைக்கப்பட்ட தினம் இன்று! அவர்கள் இருவரும் இந்த தேசத்தின் மீதும், மக்களின் மீதும் கொண்டிருந்த மாற்றுக் குறையாத பற்றினையும், அதற்காக தங்களின் தலையையே விலையாக கொடுத்த தியாகத்தையும் எண்ணிப் பார்த்தாலே ஒரு கணம் உடல் சிலிர்த்துப் போகும்.
 
சுயநலமே பெரிதென மருது சகோதர்கள் நினைத்திருந்தால் நாட்டையும், மக்களையும் ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்து, அவர்களுக்கு கப்பம் கட்டி, கால் பிடித்து, சுகவாழ்வு வாழ்ந்து இருக்கலாம்.  அப்படி ஒரு ஈன வாழ்வு தேவை இல்லை என்று கொள்கைக்காக, கொண்ட லட்சியத்திற்காக கடைசி மூச்சு வரை நெஞ்சு நிமிர்த்தி நின்றதால் தான் மருது சகோதரர்களை இப்போதும் நாம் கொண்டாடுகிறோம். 

 அவர்களின் நோக்கத்தில், உணர்வில் உண்மை இருந்ததால்தான் சின்னமருதுவின் ஸ்ரீரங்கம் பிரகடனத்தை, 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கும் படித்தாலும் கூட நம்முடைய நாடி நரம்புகளில் எல்லாம் சுதந்திர உணர்வு பீறிட்டு எழுகிறது. காளையார் கோவில் கானீஸ்வரர் கோயிலில் கம்பீரமாக நிற்கும் அந்த மாவீரர்களின் திருவுருவங்களை நினைத்து வணங்கத் தோன்றுகிறது. 

குருபூஜை நாளில் மருது பாண்டியரைப் போற்றி அவர்கள் வழியில் சாதி, மதம் பார்க்காமல் நம் தேசத்தையும் மக்களையும் நேசிப்போம். வீரத்தையும் தியாகத்தையும் தூக்கிப்பிடித்து துரோகத்தை வேரறுத்து தீயவற்றை வீழ்த்தி வென்று காட்டுவோம் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ttv dhinakaran #Maruthu brothers
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story