தவெக மாநாட்டில் மாயம்., 74 கிமீ நடந்து வீடுவந்து சேர்ந்த சிறுவன்.. ஆரத்தழுவி கண்ணீருடன் தாய் வரவேற்பு.!
தவெக மாநாட்டில் மாயமான சிறுவன் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தது எப்படி? - வாழ்க்கையை உணர்த்திய அந்த நாட்கள்.!
மாநாட்டுக்கு சென்று மாயமான சிறுவன், 74 கிமீ நடந்து வீடு திரும்பிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை அறிவிப்பு மாநாடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல இலட்சக்கணக்கான நடிகர் விஜயின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்தனர். தொண்டர்களுக்கு மத்தியில் கட்சியின் கொள்கை, கோட்பாடு, செயல்திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: "ஈடு செய்யவே இயலாத துயரம்" - தவெக தொண்டர்கள் 6 பேர் மறைவு; நடிகர் விஜய் இரங்கல்.!
அதிகாரத்தில் பங்கு
அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் ஊழல், மதவாத பிளவுவாத அரசியல் ஆகியவற்றை எதிர்த்து பேசினார். மேலும், திராவிட மாடல், மோடிமஸ்தான் வேலை, பாசிசம்-பாயசம் என திமுக, பாஜகவை நேரடியாக தாக்கி பேசி இருந்தார். அனைவருக்குமான சமஉரிமை என்ற கோட்பாட்டின் கீழ் தொடங்கப்பட்டுள்ள தனது கட்சியில், யார் கூட்டணி அமைத்தாலும், தேர்தலில் வெற்றி அடைந்து அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
மாநாடு மரணங்கள்
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கில்லி சீனிவாசன், துணை தலைவர் விஜய் கலை, தொண்டர்களாக சென்னை பாரிமுனை வசந்தகுமார், ரியாஸ், செஞ்சி உதயகுமார், வில்லிவாக்கம் சார்லஸ் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுக்கு கட்சியின் சார்பிலும், விஜயின் சார்பிலும் இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.
சிறுவன் மாயம்
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவசமுத்திரம் பகுதியில் இருந்து விஜய் ரசிகர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேருந்தில், மகேஷ் என்ற சிறுவன் மாநாட்டுக்கு வந்திருந்தார். இவர் மாநாடு முடிந்ததும் தனது குழுவை தவறுதலாக விட்டுவிட்டார். கையில் செல்போனும் இல்லை. தெரிந்தவர்களின் செல்போன் நம்பரும் மனப்பாடத்தில் இல்லை என தெரியவருகிறது. இவர் இல்லாமல் பிறருடன் பேருந்தும் கிருஷ்ணகிரி வந்துள்ளது. மகனை தாய் ஆவலுடன் எதிர்பார்த்தபோது, அவர் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் பதறிப்போயினர்.
தவறுதலாக சேலம் சென்றார்
இதனிடையே, மாநாட்டில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனது பேருந்தை அவர் கவனித்தபோது எதுவும் இல்லை. இதனால் பல கிலோமீட்டர் தூரம் நடந்தவர், லாரி ஓட்டுனரிடம் கிருஷ்ணகிரியில் தன்னை இறக்கிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். லாரியில் பயணம் செய்தவர், ஓட்டுனரின் மறதியால் சேலம் அழைத்துச் செல்லப்பட்டார். பின் அங்கிருந்து லாரி ஓட்டுநர் சிறிய தொகையை அளித்து கிருஷ்ணகிரி செல்லுமாறு பணம் கொடுத்துள்ளார்.
நடைபயணத்தில் உதவிய முதியவர்
அந்த பணத்தை வைத்துக்கொண்டு பேருந்தில் ஏறியவரிடம் போதுமான தொகை இல்லை என்பதால், நடுவழியில் இறங்கி இருக்கிறார். பின் நெடுஞ்சாலையில் நடைப்பயணத்தை தொடர்ந்துள்ளார். வழிப்போக்கராக வந்த முதியவர் ஒருவர் சிறுவன் நெடுந்தூரம் நடந்து வருகிறான் என கவனித்து இருக்கிறார். பின் சிறுவனிடம் விசாரித்தபோது, அதனை தெரிவித்துள்ளார்.
வீடு வந்தார்
உண்மையை அறிந்த முதியவர் சிறுவனுக்கு உணவு வாங்கிக்கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். பின் அவரை குளிக்க வைத்து, உடுத்த புத்தாடை எடுத்துக்கொடுத்து, பயணச்செலவுக்கு பணமும் வழங்கி அனுப்பி வைத்துள்ளார். இந்த பணத்தை பெற்றுக்கொண்ட சிறுவன் பத்திரமாக வீடு திரும்பினார். வீடு திரும்பிய சிறுவனை அவரின் தாய், சகோதரி என உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்றனர். மொத்தமாக சுமார் 74 கி.மீ சிறுவன் நடந்து வீடு திரும்பி இருக்கிறார்.
மாயமான மகனை ஆரத்தழுவி கண்ணீருடன் வரவேற்ற தாய்
இதையும் படிங்க: "ஏன் இரங்கல் தெரிவிக்கல?" - விஜயை வார்த்தைகளால் வறுத்தெடுத்த தவெக நிர்வாகியின் உறவினர்கள்.!