திடீரென தீ பற்றி எரிந்த யூபர் டாக்ஸி! மயிரிலையில் உயிர் தப்பிய திரை பிரபலம்
Uber taxi burnt in Chennai
தென்னிந்திய திரை உலகின் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஒப்பனையாளர் ஆன பல்லவி சென்ற யூபர் கால் டாக்ஸி நடு ரோட்டில் திடீரென பற்றி எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவரும் ஓட்டுனரும் உயிர் தப்பியுள்ளனர்.
தளபதி விஜய், சமந்தா, நாக சைதன்யா, அகில் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் ஒப்பனையாளர் ஆகவும் பணியாற்றியுள்ளனர் சென்னையைச் சேர்ந்த பல்லவி சிங்க். கடந்த 12ஆம் தேதி இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பல்லவி யூபர் டாக்ஸி ஒன்றை புக் செய்து அதில் பயணம் செய்துள்ளார். சென்னை டிடிகே சாலையில் உள்ள மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது பல்லவிக்கு ஒருவிதமான துர்நாற்றம் வீசியுள்ளது. ஆனால் வண்டி ஓட்டுனர் அதைப்பற்றி கொள்ளவில்லை. முதலில் அந்த துர்நாற்றம் வண்டியின் வெளிப்புறத்தில் இருந்து தான் வருகிறது என நினைத்துள்ளார். பிறகு தான் தெரிந்தது அந்த துர்நாற்றம் வண்டியின் அடியிலிருந்து வருகிறது என்று.
அந்த துர்நாற்றத்தைப் பற்றி பல்லவி ஓட்டுநரிடம் கேட்டபொழுது அவர் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக சாலையில் வாகனங்களில் வந்து கொண்டிருந்தவர்களில் சிலர் காரின் அடியிலிருந்து தீப்பொறி வருவதாக எச்சரித்துள்ளனர். உடனே ஓட்டுனர் மற்றும் பல்லவி காரை நிறுத்திவிட்டு வெளியில் ஓடிவந்துள்ளனர். வெளியில் வந்த சில நிமிடங்களிலேயே கார் முற்றிலும் தீப்பற்றி எரியத் துவங்கியுள்ளது. இதில் கார் முழுவதும் எரிந்து சாம்பலாகி வெறும் கம்பிகள் மட்டுமே மீதம் இருந்துள்ளன.
இதில் பதற்றத்தில் பல்லவி காரின் உள்ளே விட்டுவந்த அடையாள அட்டை, கைப் பை முதலானவை தீயில் எரிந்து சாம்பலாகின. இதில் மேலும் சோகமான செய்தி என்னவெனில் இந்த சம்பவம் நடந்து 12 மணி நேரமாகியும் யூபர் நிறுவனத்திலிருந்து இவர்களுக்கு எந்தவித உதவியோ, விசாரணையோ நடைபெறவில்லை என்பதுதான். எனவே இதனை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த பல்லவி நடந்த சம்பவங்களை பற்றி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.