மருத்துவர்களின் அலட்சியம், பிறந்த குழந்தையின் தொடையில் இருந்த ஆபத்து.! குளிப்பாட்டிய பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
vaccination needle struggled in infantbaby lap

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது 28). இவர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளநிலையில் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் மறுநாள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கை மற்றும் தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் சிகிச்சைக்கு பிறகு கடந்த 31-ந் தேதி மருத்துவமனையில் இருந்து மலர்விழி வீடு திரும்பியுள்ளார்.
இந்தநிலையில் குழந்தை தொடா்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது.மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடது தொடையில் லேசான வீக்கம் ஏற்பட்டது. அந்த வீக்கம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது. மேலும் குழந்தையும் தொடர்ந்து இடைவிடாமல் அழுது கொண்டே இருந்துள்ளது.
இந்தநிலையில் குழந்தை அழுவதற்கான காரணம் தெரியாமல்குடும்பமே பரிதவித்தநிலையில் மறுநாள் மலர்விழியின் தாய் தேன்மொழி குழந்தையை குளிப்பாட்டியுள்ளார். அப்பொழுது குழந்தையின் தொடையில் இருந்து தேன்மொழியின் கையில் ஏதோ குத்தியுள்ளது.மேலும் ரத்தமும் வந்துள்ளது. அதனை அவர் நன்கு கவனித்துப்பார்த்தபோது ஒரு ஊசியின் கூர்முனை வெளியே தெரிந்துள்ளது. பின்னர் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர்கள், தடுப்பூசி போடும்போது அலட்சியமாக செயல்பட்ட நர்ஸ் மற்றும் மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை மருத்துவரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.