பிறந்து 3 நாட்களான பச்சிளம் குழந்தை கடத்தல்; பெண்மணி கணவருடன் கைது.!
பிறந்து 3 நாட்களான பச்சிளம் குழந்தை கடத்தல்; பெண்மணி கணவருடன் கைது.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரின் மனைவி சூரியகலா. வாய் சரிவர பேச இயலாதவர், காதும் கேட்காது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார். பின் கருத்தடை சிகிச்சைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சூர்யகலா வார்டிலும், குழந்தை பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவிலும் இருந்துள்ளது. இதனால் குழந்தையை உணவு இடைவேளை தவிர்த்து உறவினர்கள் பார்க்க அனுமதி கிடையாது.
நோயாளிக்கு உதவ ஒரேயொரு பெண் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 05:30 மணியளவில் சூர்யகலா வார்டில் இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம், ஐயம்பேட்டைச்சேரியை சேர்ந்த திருநாவுக்கரசின் மனைவி பத்மா வருகை தந்துள்ளார்.
இவர் சூர்யகலாவுடன் நெருங்கி பழகுவது போல நடித்து உணவு கொடுத்த நிலையில், உணவை சாப்பிட்ட சூரியகலா மயங்கி இருக்கிறார். இதனையடுத்து, கலாவின் குழந்தையை பெண்மணி பத்மா கடத்தி சென்றுள்ளார்.
சூரியகலா கண்விழித்து பார்க்கையில் குழந்தை மாயமாக, வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி, உடனடியக 4 தனிப்படைகள் அமைத்து பத்மாவை தேடினர்.
அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தபோது, பத்மா திருவண்ணாமலை வழித்தடம் செல்லும் பேருந்தில் பயணித்தது உறுதியானது. இதனையடுத்து, வேலூரில் இருந்து திருவண்ணாமலை வழித்தடத்தில் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட கேமிராக்கள் தொடர்ந்து ஆராயப்பட்டது.
இறுதியாக 8 மணிநேரம் கடந்து காஞ்சிபுரத்தில் இருந்த பத்மாவை தனிப்படை அதிகாரிகள் கைது செய்தனர். அவருடன் கணவர் திருநாவுக்கரசும் கைது செய்யப்பட்டார். விசாரணையில், பத்மா பேருந்து மூலமாக திருவண்ணாமலை சென்று, வந்தவாசி வழியே காஞ்சிபுரம் பயணித்தது உறுதியானது.
இவர்கள் குழந்தையை எதற்காக கடத்தினார்கள்? குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களோ? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.