பெண்கள் மோசடி காசி வழக்கில், வழக்கறிஞர்கள் எடுத்த அதிரடி முடிவு! வாழ்த்துக் கூறிய நடிகர் விஜயகாந்த்!
Vijaykanth wish lawyers for refuse to appear kasi case
நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற வாலிபர் சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டார். இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அனைவரையும் அதிரவைத்தது. அவருக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் குரலியெழுப்பி வந்தனர்.
இந்நிலையில் பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசிக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் என நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று அறிவித்தனர். இந்நிலையில் வழக்கறிஞர்களின் இந்த முடிவை பாராட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்கின்ற காசி வழக்கில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது என்று நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஷ் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதுபோன்று பெண்களை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையில் விளையாடும் கயவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் காசிக்கு கடும் தண்டனை வழங்கி, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அந்த தண்டனை கடுமையானதாக இருக்கவேண்டும்.
மேலும், ஒட்டு மொத்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த இந்த முடிவை தேமுதிக சார்பில் வரவேற்பதோடு, அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது வழக்கறிஞர்கள் இதே போல உறுதியாக இருந்தால், தமிழகம் முழுவதும் இது போன்ற கொடிய செயல்கள் நடக்கா வண்ணம் பல வகையான செயல்களை தடுக்க முடியும் என நம்புகிறேன்.
அதேநேரத்தில், பெண்களும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப், போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாறக்கூடாது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிக்கு ஏற்ப, போலியானவர்களை கவனமாக கண்டறிந்தால் மட்டும்தான் பெண்கள் தங்களது வாழ்க்கையை தற்காத்துக் கொள்ள முடியும். மேலும், போக்சோ சட்டத்தின்கீழ் பெண்கள் மோசடி மன்னன் காசியை கைது செய்ய விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.