எஸ்.பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!
எஸ்.பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!
காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் ஆவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ள ஐ.ஏ.எப் சாலை ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் பெலூசியா (32). இவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நேற்று முன்தினம் மாலை வந்த பெலூசியா, தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்யை அவரது கணவர் மற்றும் மகள்களின் மீது ஊற்றிய அவர், பின்னர் தன் மீதும் ஊற்றி கொண்டு தீ வைக்க முயற்சித்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை தீ வைக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தது குறித்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தனக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை அப்பகுதியில் சேர்ந்த சிலர் போலி ஆவணம் தயாரித்து தன்னிடமிருந்து அபகரித்து விட்டதாகவும் , இது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பட்டாபிராம் காவல் நிலையம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் இது வரையில் எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதனையடுத்து பெலூசியா குடும்பத்தினரை ஆறுதல் படுத்திய காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதன் பின்னர் அவர்கள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.