ஹேக்கர்ஸ்களின் ஆதிக்கத்தை முற்றிலும் அழிக்க கூகுளின் புதிய கண்டுபிடிப்பு
ஹேக்கர்ஸ்களின் ஆதிக்கத்தை முற்றிலும் அழிக்க கூகுளின் புதிய கண்டுபிடிப்பு
இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் இணையதளம் தான் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் தனது வாடிக்கையாளர்கள் விவரங்களை பாதுகாப்பதில் அணைத்து நிறுவனங்களும் மிக கவனமுடன் செயல்படுகின்றன.
இந்த பாதுகாப்பு அம்சங்களை உடைத்தெறிந்து தகவல்களை திருடுவதில் ஹாக்கர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இவ்வாறு இணையதள பயன்பாட்டாளர்களின் விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் கூகுளின் புதிய சாதனம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய கூகுள் சாதனம் டைட்டன் செக்யூரிட்டி கீ என அழைக்கப்படுகிறது.
கூகுளின் டைட்டன் செக்யூரிட்டி கீ கூகுள் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கூகுள் சாதனம் வாடிக்கையாளர்களின் ஆன்லைன் விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களையும் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள பல்வேறு சாதனங்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் செக்யூரிட்டி கீ சாதனங்கள் சைபர்செக்யூரிட்டி பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
விற்பனைக்கு வந்திருக்கும் கூகுள் செக்யூரிட்டி கீ, 2017-ம் ஆண்டு முதல் கூகுளில் பணியாற்றும் சுமார் 85,000 ஊழியர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் ஆன்லைன் மற்றும் ஹேக்கர்களிடம் இருந்து எவ்வித பாதிப்புகளிலும் சிக்கவில்லை என கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் டைட்டன் செக்யூரிட்டி கீ பயன்படுத்திய கூகுள் ஊழியர்கள் எவரும் ஃபிஷிங் எனப்படும் ஆன்லைன் அச்சுறுத்தலால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆன்லைனில் ஃபிஷிங் பல்வேறு விதங்களில் மேற்கொள்ளப்படுகிறது, இவற்றை கொண்டு பயனர்களின் விவரங்களை பறிப்பதே ஹேக்கர்களின் நோக்கம் ஆகும்.
பொதுவாக செக்யூரிட்டி கீ சாதனங்கள் யு.எஸ்.பி. சார்ந்த சாதனங்கள் ஆகும், இவை பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு-அடுக்கு வழிமுறையை செயல்படுத்தும். பொதுவான பாதுகாப்பு வழிமுறையில் பயனர்கள் தங்களின் பாஸ்வேர்டு மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட வேண்டும்.
இதுபோன்ற செக்யூரிட்டி கீ சாதனங்கள் இரண்டாவது பாதுகாப்புடன் அவற்றை கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் செருக வேண்டும். இது ஹேக்கர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும். கூகுள் ஊழியர்கள் பயன்பாட்டில், மிகவும் கச்சிதமாக வேலை செய்ததைத் தொடர்ந்து கூகுள் டைட்டன் செக்யூரிட்டி கீ விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கூகுள் டைட்டன் செக்யூரிட்டி கீ விற்பனை இன்னும் துவங்காத நிலையில், அமெரிக்க சந்தையில் இதன் விலை 50 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.