×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமெரிக்க பாதிரியார்கள் அட்டூழியம்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் பாலியல் பலாத்காரம்

A shocking report released by A Juries team of Pennsylvania State that Roman Catholic Priests abused thousands of children over decades in Pennsylvania.

Advertisement

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த மாகாண தலைமை நீதிபதிகள் குழு மற்றும் அட்டார்னி ஜெனரல் ஷபிரோ ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட  884 பக்கங்கள் கொண்ட ஒரு பொது அறிக்கை அமெரிக்காவில் புயலைக் கிளப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், பென்சில்வேனியா மாகாணத்தில் 1940 ஆம் ஆண்டு முதல் சுமார் 300 ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களால் 1000-க்கும் மேலான சிறுவர் சிறுமிகள் பாலியல் பாலாத்காரம் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

மூத்த சர்ச் அதிகாரிகளை குற்றம் சாட்டிய இந்த அறிக்கையில் தற்போது வாஷிங்டன் டி.சியில் ஆர்க்பிஷப்பாக உள்ளவரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பாதிரியார் டான்சில்ஸ் அறுவை சிகிச்சை முடிந்த 7 வயது சிறுமியைப் பார்க்கச் சென்றபோது அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளார்.

இன்னொரு பாதிரியார் 9 வயதுச் சிறுவனை மோசமான முறையில் பலாத்காரம் செய்த பிறகு புனித நீரால் சிறுவனின் வாயைக் கழுவியுள்ளார்.

மற்றொரு பாதிரியார், ஒரு சிறுவனைப் பலாத்காரம் செய்து விட்டு பின்னர் அந்த சிறுவனையே பாவமன்னிப்புக் கோர வைத்துள்ளார். இப்படி பாதிரியார்களின் பலாத்கார குற்றங்கள் பட்டியலிட்டுக்கொண்டே செல்கிறது அந்த அறிக்கை.

மேலும், இந்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள், பலாத்காரம் செய்த பாதிரிமார்கள் குறித்த உண்மையான தரவுகள் கிடைக்கவில்லை என்றும் ரகசிய சர்ச் ஆவணங்கள் தொலைந்தபடியால் தரவுகளைப் பெற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிரியார்களால் சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான இந்த அறிக்கையில், தலைமை ஜூரி கூறுகையில், "இது போன்ற குற்றங்களைத் தடுக்க நிறுவன ரீதியான சீர்த்திருத்தங்கள் இருந்தும், சர்ச்சின் தனிப்பட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கான பொருப்பிலிருந்து தவறியுள்ளனர். தவறு செய்தவர்களைக் பாதுகாத்ததுடன், தவறு செய்தவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க சர்ச் பாலியல் சுரண்டல்கள் எனும் புத்தகத்தை அவ்வளவு எளிதில் மூடிவிட முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதிரியார்களின் செயல் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடுகையில், "சிறுவர் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் இதற்குப் பொறுப்பேற்காததுடன் ஒன்றுமே செய்யவில்லை என்பதொடு இந்தப் பாவச்செயலை மறைத்தும் உள்ளனர்" என்று கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அட்டர்னி ஜெனரல் ஜோஷ் ஷபிரோ கூறுகையில், "தவறிழைத்த 100 பாதிரியார்கள் ஏற்கெனவே இறந்துவிட்டனர். பலர் ஓய்வு பெற்றுவிட்டனர், சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், சிலர் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது பற்றி இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 1.7 மில்லியன் கத்தோலிக்கர்களை பிரதிநிதித்துவம் செய்யும் 8 பாதிரிமார்களில் 6 பேர் மீது கடுமையான விசாரணை நடைபெற்றுள்ளது"என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை வெளியான பிறகு, செவ்வாய்கிழமை ரோமன் கத்தோலிக்க டயோசீஸ் தலைவர்கள் பாலியல் பலாத்காரத்துக்காக பாதிக்கப்பட்டவர்களிட்ம் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

இப்படி பென்சில்வேனியா மாகாணத்தில் பாதிரியார்களால் 1000 சிறுவர் சிறுமியர்களுக்கு மேல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஜூரிகளின் அறிக்கையில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்காவில் பெரிய புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Advertisement

 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story