அமெரிக்காவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை
earth quake in alaska
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுனாமி ஏற்பட கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.7 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளன.
சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இது தான் மிகத்தீவிரமானது என்று கூறப்படுகிறது. உயிரிழப்பு மற்றும் பொருட்சேதங்கள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. வெள்ளை மாளிகை வரை பதற்றம் அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையும், அங்கு நிலவும் சூழ்நிலை குறித்த தகவல் சென்று கொண்டே இருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தில் சாலைகள், கட்டடங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அலாஸ்காவின் விமான நிலையத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அலாஸ்காவிலிருந்து வடக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆன்சோரேஞ்ச் என்னுமிடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அமெரிக்க உள்துறை செயலாளர் ரியான் ஷின்கே, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சாலைகள், பாலங்கள் மற்றும் தண்ணீர் குழாய்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலாஸ்காவிலுள்ள தெற்கு கெனாய் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, சிறிது நேரம் கழித்து திரும்ப பெறப்பட்டது.
திடீரென அமெரிக்காவை தாக்கிய இந்த பேரழிவால் மக்களும் அரசாங்கமும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பீதியில் மக்கள் உள்ளனர். அமெரிக்காவை சுற்றியுள்ள கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.