இலங்கைக்கு உதவிய தமிழக முதல்வருக்கும் மக்களுக்கும் நன்றி,.. ரணில் விக்ரமசிங்கே உருக்கம்..!
இலங்கைக்கு உதவிய தமிழக முதல்வருக்கும் மக்களுக்கும் நன்றி,.. ரணில் விக்ரமசிங்கே உருக்கம்..!
இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பிய தமிழக முதல்வருக்கும், மக்களுக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு முதல் கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் கப்பலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி ஆதரவு கரம் நீட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவை பிரதான வருவாயாக கொண்ட இலங்கையில், கோவிட் லாக்டவுன் காரணமாக மாபெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால், இலங்கையில் மின் வெட்டு, உணவு, மருந்து, பெட்ரோல் தட்டுப்பாடு என பல்முனை தாக்குதலுக்கு மக்கள் ஆளாகினர். அத்தியவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொருள்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.
இதனை தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மகிந்த ராஜபக்சே தான் வகித்து வந்த பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜபக்சேவின் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொருக்கி தீக்கிரையாக்கப்பட்டன.
இதற்கிடையே உயிருக்கு அஞ்சி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இலங்கை திரிகோணமலை பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்தார்.அதைத்தொடர்ந்து,இலங்கையின் குழப்பமான சூழலுக்கு மத்தியில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றவுடன் இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண சிறப்பு குழுக்களையும் அமைத்துள்ளார்.
இந்த நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்நாட்டிற்கு உதவும் வகையில் 40 டன் அரிசி, 137 வகை மருந்துகள், 500 டன் பால்பவுடர் ஆகியவை வழங்கப்படும் எனக்கூறியிருந்தார். இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில் இருந்து மே.18ம் தேதியன்று அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பலை ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். முதல் கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் கப்பலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி ஆதரவு கரம் நீட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரணில் விக்ரமசிங்கே தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, இந்தியாவில் இருந்து பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உட்பட ரூ.2 பில்லியன் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் இலங்கைக்கு இன்று வந்துசேர்ந்துள்ளன. ஆதரவு கரம் நீட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.