அதிபர் பதவியை துறக்கும் முன்பாக டொனால்ட் டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை.!
அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். ஜோ பைடன் வெற்றிபெற்றபோதும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் தற்போது வரை வெளியாகவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்த பின்னர் ஜோ பைடன் 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் உயர் மதிப்பு மிக்க இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார். அவர் பாதுகாப்பு துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்கிறார். எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.