எல்லோருக்கும் தைரியம் சொன்னான்.. அன்று காலை.., உயிரிழந்த இந்திய மாணவர் குறித்து கண்ணீர் தகவல்.!
எல்லோருக்கும் தைரியம் சொன்னான்.. அன்று காலை.., உயிரிழந்த இந்திய மாணவர் குறித்து கண்ணீர் தகவல்.!
உக்ரைன் நாட்டில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார். இவருடன் விடுதியில் தங்கியிருந்த ஹாவேரி நகரை சேர்ந்த அமீத் என்பவர் அன்றைய நாளில் நடந்த நிகழ்வு தொடர்பாக தெரிவித்தார்.
அமித் கண்ணீர் மல்க தெரிவித்ததாவது, "நவீன் மற்றும் நான் ஒரே விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் பயின்று வருகிறோம். நான் 5 ஆம் வருடம், நவீன் 4 ஆம் வருடம். இருவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக இருந்தோம். எங்களோடு கர்நாடக மாநிலத்தின் வெவ்வேறு பகுதியை சேர்ந்த 25 பேர் இருக்கின்றனர். நாங்கள் அனைவரும் பதுங்கு குழிகளில் இருந்தோம். முதல் 2 நாட்கள் உணவு மற்றும் நீர் கிடைத்தது.
பின்னர் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதால், வெளியே சென்று உணவு நீர் மட்டும் வாங்கி வருவோம். வெளியே செல்வதற்கு நாங்கள் இருவர் மட்டுமே பயணிப்போம். எங்களோடு இருந்தவர்களுக்கு உக்ரைன் மொழி தெரியாது. 2 முறை குறுக்கு வழியில் சென்று உணவு பொருட்கள் வாங்கிவிட்டு, ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வந்தோம். நேற்று அதிகாலை 3 மணிவரை பேசிக்கொண்டு இருந்த நிலையில், காலையில் பல்பொருள் அங்காடிக்கு சென்று பொருட்கள் வாங்க முடிவெடுத்தோம்.
3 மணிக்கு மேல் அனைவரும் உறங்கிவிட்ட நிலையில், காலை 6 மணிக்கு எழுந்த போதுதான் நவீன் தனியாக உணவு பொருட்கள் வாங்கவும், பணம் எடுக்கவும் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அவரின் உள்ளூர் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, மேலும் சில உணவு பொருட்கள் வாங்கி வர தெரிவித்தோம். பின்னர், நீண்ட நேரம் ஆகியும் தகவல் இல்லை. குண்டுவீச்சு சத்தமும் கேட்டது.
மீண்டும் அவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்கையில், மறுமுனையில் பேசியவர் வெடிகுண்டு தாக்குதலில் இளைஞர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தார். எப்போதும், நாங்கள் 3 பேரும் செல்வது இயல்பானது. அன்று நவீன் தனியே சென்று எங்களை காப்பாற்றினான். ஒருவேளை நாங்கள் 3 பேரும் சென்றிருந்தால், நாங்களும் இறந்திருப்போம். இந்த சம்பவம் நாங்கள் இருந்த இடத்தில் இருந்து 50 மீ தொலைவில் நடந்தது" என்று தெரிவித்தார்.
அவருடன் (நவீன்) பயின்று வந்த மாணவி தெரிவிக்கையில், "நவீன் தான் எங்களுக்கு எப்போதும் தைரியம் சொல்லிக்கொண்டு இருப்பார். அவரின் உயிரை பணயம் வைத்து, நவீன் உட்பட 3 பேர் தான் உணவு பொருட்கள் வாங்க செல்வார்கள். பணம் எடுத்து வருவார்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து போலந்து செல்ல திட்டமிட்ட நிலையில், வழிப்பயணத்திற்கு தேவையான உணவை வாங்கவும், இந்திய பணத்தை டாலராக மாற்றவும் முடிவெடுத்தோம். ஆனால், இன்று நவீன் எங்களுடன் இல்லை" என்று தெரிவித்தார்.