உக்ரைன் - ரஷியா போருக்கு அமெரிக்காவே முழு காரணம் - வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டு..!
உக்ரைன் - ரஷியா போருக்கு அமெரிக்காவே முழு காரணம் - வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டு..!
ஐரோப்பிய யூனியனின் நேட்டோ படையில் உக்ரைனை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ரஷியா உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து சென்றுள்ளது. கடந்த 4 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், ரஷிய படையின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது.
இதனால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இருவரும் போரில் இறங்கிவிட்டதால், இராணுவ மட்டத்திலான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இது பேச்சுவார்த்தையில் தடையினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரஷியா - உக்ரைன் போர் குறித்து வடகொரியா அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. வடகொரியா அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலாவது, "ரஷியாவின் பாதுகாப்பு தொடர்பான நியாய கோரிக்கையை அமெரிக்கா புறக்கணிக்கிறது.
அமெரிக்கா இராணுவ மேலாதிக்கத்தை பின்பற்றி வருவதால், ரஷியா வேறு வழியின்றி உக்ரைனின் மீது போர்தொடுத்து சென்றுள்ளது. இந்த போருக்கு முழுமுதற், முக்கிய காரணம் அமெரிக்காதான். உக்ரைனின் விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாடை கொண்டு, அமைதியை நிலைநிறுத்த முயற்சி செய்கிறோம் என்று கூறி, பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு வருகிறது.
பிற நாடுகள் தங்களது சொந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையை காரணமே இல்லாமல் கண்டித்து வருகிறது. அமெரிக்கா உலகை ஆட்சி செய்த காலம் சென்றுவிட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.