மனிதனுக்கு பன்றியின் இதயம் வெற்றிகரமாக பொருத்தம்.. "உலக மனித வரலாற்றில்" மாபெரும் சாதனை..!
மனிதனுக்கு பன்றியின் இதயம் வெற்றிகரமாக பொருத்தம்.. உலக மனித வரலாற்றில் மாபெரும் சாதனை..!
உலக வரலாற்றில் முதல் முறையாக பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலமாக மனிதருக்கு மருத்துவர்கள் பொறுத்தியுள்ளனர். பன்றி இதயம் பொருத்தப்பட்ட மனிதர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பென்னட் (வயது 57). இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தனது வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு இறுதி தருணத்தில் தவித்து வந்துள்ளார். ஆனால், இவருக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருந்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவை பொறுத்த வரையில் வருடத்தில் 1.20 இலட்சம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு, மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக காத்துகொண்டு இருக்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 20 பேர் மரணிக்கின்றனர் என்று அங்குள்ள மருத்துவ பதிவு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் தான் மாற்று அறுவை சிகிச்சைக்காக பன்றியின் இதயத்தை பொருத்தலாம் என மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்று வந்த நிலையில், பன்றியின் சிறுநீரகம் மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு அவை சீராக இயங்கியும் வந்தது. அதன் அடிப்படையில், பன்றியின் இதய மரபணுவை மனிதருக்கு ஏற்ற வகையில் மாற்றி, அதனை மனிதருக்கு பொறுத்த மருத்துவர்கள் திட்டமிட்டனர். இந்த விஷயத்திற்கு டேவிட் பென்னட்டும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, அவருக்கு இதயம் வழங்கப்போகும் பன்றி தேர்வு செய்யப்பட்டு, அதன் இதயத்தை எடுத்து மனிதருக்கு பொருத்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மேரிலாந்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் வைத்து டேவிட் பென்னட்டுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. இதன் மூலமாக முதல் பன்றி இதயம் பொருத்தப்பட்ட மனிதர் என்ற பெருமையை டேவிட் தக்கவைத்துள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளிடம் இருந்து உறுப்புக்கள் எடுக்கப்பட்டு மனிதர்களுக்கு பொறுத்தப்படுவதால், உயிரிழக்கும் தருவாயில் உள்ள பலரும் தங்களின் வாழ்நாட்களை நீட்டிக்க இயலும், உடலுறுப்பு தேவையில் இவை பெரும் மாற்றத்தினை கொண்டு வரும் என்றும் மருத்துவர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.