தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆசிய கோப்பை: படமெடுத்து சீறிய வங்கதேசம்.. கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஆசிய கோப்பைக்கான 14ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் போராடி வென்றது.
இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் இறுதி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான லிடான் தாஸ் மற்றும் மெஹ்தி ஹசன் அதிரடியாக ஆடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். முதல் 20 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி 120 ஐ தொட்டது.
இவர்களை எப்படி சமாளிப்பது என்று தடுமாறிய இந்திய அணிக்கு 21 ஆவது ஓவரை வீசிய கேதர் ஜாதவ் ஆறுதல் அளித்தார். அவர் வீசிய அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் மெஹ்தி ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்களில் சவுமியா சர்காரை(33) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
விக்கெட்டுகள் ஒரு பக்கம் சரிந்தாலும் சிறப்பாக ஆடிய லிட்டன் தாஸ் சதம் அடித்தார். சிறப்பாக ஆடிய அவர் 121 ரன்கள் எடுத்து 41 ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி 48.3 ஓவரில் 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளையும் கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் தவான் நல்ல துவக்கத்தை அளித்தனர். ஆனால் தவான் 5 ஆவது ஓவரில் 15 ரன்கள் எடுத்து அவட்டானார். அவரைத்தொடர்ந்து ராயடுவும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து 48 ரன்களில் 17 ஆவது ஓவரில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 83. அதன் பிறகு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் தோனி மிதமான ஆட்டடத்தை வெளிப்படுத்தினர். இருவரும் டெஸ்ட் போட்டியை போல் ஆடி வந்தனர். இருவரும் 60 பந்துகளுக்கு மேல் சந்தித்து 37 மற்றும் 36 ரன்கள் முறையே எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த ஜடேஜா மற்றும் புவனேஸ்வர் இருவரும் தலா 23 ரன்கள் எடுத்து வெளியேறினர். இந்தியாவின் ரன் விகிதம் மிகவும் மோசமாக இருந்தது.
கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜாதவ் மற்றும் குல்தீப் களத்தில் இருந்தனர். ஒன்றும் இரண்டுமாக இருவரும் எடுத்து சமாளித்தனர். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் இந்த ஆட்டமும் டிராவில் முடிந்து விடுமோ என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக மக்மதுல்லா வீசிய கடைசி பந்து ஜாதவ் காலில் பட்டு செல்ல ஒரு ஓட்டம் எடுத்து இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் விருதை சதம் அடித்து அசத்திய லிட்டன் தாஸ் பெற்றார். தொடர் நாயகனாக இந்தியாவின் ஷிகர் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.