என் வாழ்நாள் முழுக்க அது பெரும் குறையாகவே இருக்கும்.! நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்தில் கண்கலங்கிய நடிகர் கார்த்தி!!



actor-karthi-condolence-for-actor-vijayakanth

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது மறைவு இந்தியளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் கண்ணீருடன் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாததால் நடிகர் கார்த்தி தந்தை சிவகுமாருடன் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேப்டன் தற்போது நம்முடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்த முடியவில்லை என்பது என் வாழ்நாள் முழுவதும் பெரும் குறையாகவே இருக்கும்.

vijayakanth

அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. ஆனால் அவரது வீட்டில் தினமும் யாருக்காவது சாப்பாடு போட்டுக் கொண்டே இருப்பார்கள் என சிறுவனாக இருக்கும்போதே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றபின் அவரை நேரில் சந்தித்தபோது மகிழ்ச்சியுடன் பேசினார். நடிகர் சங்கத்தில் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும்போதெல்லாம் அவரைதான் மனதில் நினைத்துக் கொள்வோம். அவர் மிகப்பெரிய ஆளுமை.

எங்களது மனதில் அவர் எப்பொழுதும் இருப்பார். வரும் 19ஆம் தேதி கேப்டனுக்காக இரங்கல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அவரது புகழ் எப்பொழுதும் நிலைத்திருக்கும் வகையில் நாங்கள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள், அரசிற்கு வைக்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தையும் அந்த கூட்டத்தில் சொல்வோம் என்று கண்கலங்கியவாறு கூறியுள்ளார்.