மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெய்பீம் பட பிரச்னை.! நடிகர் சூர்யாவிடம் அன்புமணி ராமதாஸ் கேட்கும் 9 கேள்விகள்.!
ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும், உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். இதுதான் ஜெய்பீம் என்பதற்கு நீங்கள் அறிந்து கொண்ட பொருளா? என பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிற்கு பல கேள்விகளை கேட்டுள்ளார்.
1.‘ஜெய்பீம்’ உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தானா?
2.உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்றால், உண்மை நிகழ்வு நடந்த இடம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த முதனை கிராமமா? அல்லது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கோணமலை கிராமமா?
3.உண்மை நிகழ்வில் முதனை கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த இராஜாக்கண்ணு என்ற இளைஞரை கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்து படுகொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது தங்களுக்குத் தெரியுமா? இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் ஜெய்பீம் திரைப்படத்தை உருவாக்கியிருக்க முடியாது.
4.இராஜாக்கண்ணுவை படுகொலை செய்த காவல் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட, கொலையான பழங்குடி இளைஞருக்கு இராஜாக்கண்ணு, அவருக்காக போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜிக்கு பெருமாள் சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய தாங்களும், இயக்குனரும், சார்பு ஆய்வாளர் பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?
5.காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட இராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் தமது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஊராட்சித் தலைவரும், ஊர் மக்களும் தான் தமக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். அவ்வாறு இருக்கும் போது திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சித் தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்?
6.கொடூர காவல் அதிகாரியாக நடித்திருப்பவர் வீட்டில் தொலைபேசும் காட்சியில் வன்னியர்களின் புனிதச் சின்னமான அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி வைக்கப்பட்டிருந்தது ஏன்?
7.படைப்பாளிகளில் இருவகை உண்டு. ஒரு தரப்பினர் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இரண்டாவது தரப்பினர் திரைப்படத்தில் ஏதேனும் சர்ச்சையை (Controversy) எழுப்பி, அதைப் பேசு பொருளாக்கி, அந்த விளம்பரத்தில் திரைப்படத்தை ஓட வைக்க முயல்பவர்கள். இவற்றில் எந்த வகையில் உங்களைச் சேர்ப்பது?
8.ஜெய்பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி…. அம்பேத்கரியத்துக்கு வெற்றி என்று பொருள். அம்பேத்கர் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்று கற்பிக்கவில்லை. ஆனால், ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும், உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். இது தான் ஜெய்பீம் என்பதற்கு நீங்கள் அறிந்து கொண்ட பொருளா?
9.இராஜாக்கண்ணுவின் படுகொலை குறித்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தங்களுக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், இராஜாக்கண்ணுவின் படுகொலைக்காக மற்ற கட்சிகளை இணைத்து முதலில் போராட்டம் நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 42 ஆண்டுகளாக சாதி, மதம் பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி, உரிமைகளை வென்றெடுத்துத் தந்திருக்கிறார். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியாதா?