ஆஸ்கர் நாயகனின் AI குறித்த பேச்சு.! முன்னேற்றத்திற்கு பயன்படுத்துங்கள், பணி நீக்கத்திற்கு அல்ல.!
'தி கோட் லைஃப்' என்ற திரைப்படம் மலையாளம் உட்பட பல மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பிரித்திவிராஜ் சுகுமாரன் மற்றும் அமலா பால் நடித்துள்ள இப்படத்தை இயக்கியவர் தேசிய விருது பெற்ற பிலெஸ்சி ஆவார். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படம் சம்பந்தப்பட்ட விழா ஒன்றில் பேசிய அவர், சேர்க்கை நுண்ணறிவு குறித்து தனது கருத்துக்களை கூறியிருந்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முடியும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். பல தலைமுறைகளாக இருக்கும் சாபங்களை ஒழிக்கவும், ஏழைகளை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லவும், கலை மற்றும் அறிவியல் துறைகளில் தலைவர்களை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவும் என்றும் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு ஒரு கருவியாக இருந்து, எந்த ஒரு துறை குறித்தும் பல ஆண்டுகளுக்கு படிக்க வேண்டிய கட்டாயத்தை அகற்றுகிறது என்றும் கூறியுள்ளார். ஏஐ தொழில் நுட்பத்தை மனிதர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, அவர்களின் வேலையை பறிப்பதற்காக அல்ல என்றும் கூறினார்.
வேலை கொடுக்கும் இடத்தில் இருப்பவர்களும், தலைவர்களும் இத்தகைய தொழில்நுட்பங்களின் மூலம் யாருடைய வேலையும் பறிபோக கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். கலைத்துறையில் ஏதாவது ஒன்றை உருவாக்க இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்றும் தெரிவித்த அவர், நமது நேரத்தை வெகு அளவில் மிச்சப்படுத்தவும் இது உதவும் என்றார்.
இந்த சிறப்பான தொழில்நுட்பத்தை கருவியாக பயன்படுத்த வேண்டும். இதனைக் கொண்டு யாரையும் பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் தனது கருத்துக்களை தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.