தேசிய மொழி இந்தி இல்லை... தடாலடியாக கூறி சர்ச்சையை கிளப்பிய நடிகை கங்கனா ரனாவத்.!
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தாம்தூம் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத். மேலும், இவர் பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கங்கனா அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து சர்ச்சையில் சிக்குவார்.
சமீபத்தில் கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றி குறித்து பேசிய நடிகர் சுதீப், இந்தி நம் தேசிய மொழி இல்லை என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பதில் அளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்தி தான் எப்போதும் நமது தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்று தன்னுடைய “தாகத்” திரைப்படத்தின் டிரையலரை வெளியிட்டார். அந்த விழாவில் பேசிய அவர், “நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்தி தேசிய மொழி தான். ஆகவே பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி மொழி நம்முடைய தேசிய மொழி என்று தெரிவித்த கருத்தில் எந்தவித தவறும் இல்லை. இந்தியை தேசிய மொழியாக ஏற்க மறுப்பது அரசியலமைப்பை மறுப்பதை போன்றது.
மொழி வாரியாக வேற்றுமை கொண்டுள்ளது இந்தியா. எல்லோரையும் ஒற்றை புள்ளியில் இணைக்க பொதுவான மொழி ஒன்று தேவை. இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. ஆனால் டெக்னிக்கலாக பார்த்தால் இந்தியை விட தமிழ் பழமையானது. ஆனால் சமஸ்கிருதம் அதனை காட்டிலும் தொன்மையானது.
எனவே சமஸ்கிருதம் ஏன் நாட்டின் தேசிய மொழியாக இருக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானதால் அதுதான் தேசிய மொழியாக இருக்க வேண்டும். தேசிய மொழி எது என்று என்னைக் கேட்டால், அது இந்தி இல்லை, சமஸ்கிருத மொழியாக இருக்கலாம் என நினைக்கிறேன் என்று தடாலடியாக கூறியுள்ளார் கங்கனா ரனாவத்.