தாறுமாறாக பரவும் பன்றிக்காய்ச்சல்! தடுப்பூசி தட்டுப்பாட்டால் பெற்றோர்கள் அவதி!
அக்டோபர், நவம்பர் வந்தாலே டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வியாதிகள் மக்களை பயமுறுத்த தொடங்கிவிடுகிறது. கடந்தவருடம் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது இந்த டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல்.
பன்றி காய்ச்சல்:
‘ஸ்வைன் ப்ளூ’ என பன்றி காய்ச்சலை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது ‘ப்ளூ வைரஸ்’ எனப்படும் ‘இன்ப்ளூயென்சா வைரஸ்’ என்ற கிருமியால் பன்றிகளுக்கு வரக்கூடிய நோய். இந்த வைரஸ், எப்படி மனிதர்களுக்கு சளி- காய்ச்சலை வரவழைக்கிறதோ, அதேபோன்று பன்றிகளுக்கும் பாதிப்பை வரவழைக்கும். தொடக்கத்தில் பன்றிகளிடம் இருந்துதான் இந்த நோய் மனிதர்களுக்கு பரவியது. ஆனால், இப்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக காற்றின் மூலம் பரவி வருகிறது. தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருட்களை தொட்டுவிட்டு, பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளை தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.
எப்படி தப்பிப்பது?
தினமும் உணவு உண்ணும் முன்பும், பின்பும் சோப்பு போட்டு முறையாக கையை கழுவ வேண்டும். சளி இருமல் இருப்பவர்கள் இருமும் போது கைக்குட்டை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சளி, இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்து பராமரிக்கலாம். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்கு பரவும்.
வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும்..
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு:
பொதுவாக இந்தவகையான நோய் தொற்றுகளுக்கு அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்தான். நோய் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையிடம் இருந்து மற்றொரு குழந்தைக்கு பரவும் வாய்ப்பு அதிகம். இதை மனதில் கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் நோய் தொற்று அதிகம் இருப்பதால் அணைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகளில் கூட தடுப்பூசிகள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
எனவே பெற்றோர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட்டு தங்களது குழந்தைகளின் நலனில் அக்கறையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.