இரும்பு பாலம் திருடப்பட்ட விவகாரம்.. அரசு அதிகாரியுடன் கைகோர்த்து திருட்டு கூட்டம் பகீர் சம்பவம்.. 8 பேர் கைது..!
1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 500 டன் எடை கொண்ட இரும்பு பாலம் திருடப்பட்ட சம்பவத்தில் நீர்வளத்துறை துணைப்பிரிவு அதிகாரி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலத்தில் உள்ள ரோக்தாஸ் மாவட்டம், நாசிரிங்க் பகுதியில் உள்ள ஆற்றை கடந்து செல்வதற்காக 60 அடி நீளம் உள்ள இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது.1966 ஆம் ஆண்டு வரை இந்த பகுதியில் பாலம் இல்லாததால் மக்கள் படகில் பயணம் செய்து வந்துள்ளனர். அப்போது ஒரு படகு விபத்தில் நீரில் மூழ்கி பலர் உயிர் இழந்ததால், கடந்த 1972 ஆம் ஆண்டு இந்த பகுதியில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளடைவில் அந்த இரும்பு பாலம் சேதமடைந்ததால், அதன் அருகிலேயே கான்கிரீட் பாலம் ஒன்று கட்டப்பட்டது. பின்னர் மக்கள் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்ததால், இரும்பு பாலம் மக்களின் பயன்பாட்டில் இல்லாமல் போனது. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கான்கிரீட் பாலத்தில் சென்ற போது, அங்கிருந்த இரும்பு பாலம் முழுவதுமாக காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், இது குறித்து காவல்துறையினரிடம் 10 அடி அகலம், 12 அடி உயரம், 60 அடி நீளத்தில் இருந்த இரும்புபாலம் முழுவதுமாக காணாமல் போய் விட்டதாக புகார் அளித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், இந்த திருட்டு பட்டப்பகலில் தான் நடந்துள்ளது என தெரியவந்தது.
அத்துடன் நீர்ப்பாசனத்துறையுடன் இணைந்து பணியாற்றும் அரசு அதிகாரிகள் போல காட்டிக் கொண்ட திருடர்கள் சிலர், மக்கள் உபயோகிக்காத இரும்பு பாலத்தை எரிவாயு கட்டர் மற்றும் ஜேசிபி பயன்படுத்தி பாலத்தை முழுவதுமாக அகற்றியுள்ளனர். மேலும், கிராம மக்கள் 'நீர்ப்பாசனத்துறையினரிடம் முன்பே பாலத்தை அகற்றுவதற்காக விண்ணப்பம் அளித்ததால், அவர்கள் தான் வந்து அகற்றிவிட்டதாக நினைத்து ஒன்றும் கூறாமல் இருந்து விட்டோம்' என பொதுமக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நீர்வளத்துறை துணைப்பிரிவு அதிகாரி உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக, பீகார் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் பார்தி தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட எட்டு பேரிடம் இருந்து ஒரு ஜேசிபி, 247 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பிகள் மற்றும் பாலத்தை சேர்ந்த பிற பொருட்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இரயில் எஞ்சினை இரும்பு கடையில் எடைக்கு போட்ட சம்பவம் நடைபெற்று இருந்த நிலையில், அந்த விவகாரத்தில் இரயில்வே பணியாளர் கைது செய்யப்பட்டார். எடைக்கு போடப்பட்ட இரயிலின் பாகங்கள் மீட்கப்பட்டன. இந்த சூழ்நிலையில் இரும்பு பாலமும் திருடப்பட்டுள்ளது.