இன்னும் சில நாட்கள் வாட்டி எடுக்கப் போகும் குளிர்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!!



A few more days of bitter cold; India Meteorological Department Warning...

டெல்லி போன்ற வட மாநிலங்களில், மேலும் சில நாள்களுக்கு குளிர் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வட மாநிலங்களில் இன்னும் சில நாட்களுக்கு குளிர் அதிகமாக இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. வட மாநிலங்களின் கடந்த சில வாரங்களாகவே மிக அதிக குளிரால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காலை வேளையில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் தினசரி 500 க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளும் 200க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  மேலும் குளிரின் தாக்கத்தால் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளது.எனவே, கடுங்குளிர் வீசும் காலை வேளையில் வெளியே செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த கடும் குளிர் மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மேற்கு மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜனவரி 18ஆம் தேதி வரை அதிக குளிர் வீசும் எனவும், வட மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில இடங்களில் 2 டிகிரி கீழ் வெப்ப நிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் குளிர் பூஜ்ஜியத்திற்கு கீழ் செல்லும் என கூறப்பட்டுள்ளது.  காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் மராடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், குளிரின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் இயங்கும் நேரம் அங்கு மாற்றப்பட்டுள்ளன.