ஒரே டிக்கெட்டில் 2 வது முறையாக வெளிநாடு செல்ல முயற்சித்த ஆந்திர மாநில பயணியால் விமான நிலையத்தில் பரபரப்பு..!



Andhra Pradesh passenger trying to go abroad for the 2nd time on the same ticket

ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (30). இவர் வேலைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஏர் இந்தியா விமானத்தில் சென்னையில் இருந்து குவைத் நாட்டிற்கு சென்றார். குவைத் விமான நிலையம் சென்றடைந்த ராமனிடம் இருந்த ஆவணங்களை அந்த நாட்டு குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். ராமனிடம் வேலைக்காக செல்வதற்கான முழுமையாக ஆவணங்கள் இல்லை, மேலும் அவை போலி ஆவணங்கள் என்று தெரியவந்தது.

இதனையடுத்து ராமனை குவைத் நாட்டிற்குள் அனுமதிக்காமல், விமான நிலையத்தில் வைத்திருந்தனா். பின்னர் அவரை, குவைத்திலிருந்து அவா் வந்த அதே ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு திருப்பி அனுப்பினா். அந்த விமானம் சென்னை விமானநிலையத்திற்கு நேற்று காலை 6. 30 மணிக்கு வந்ததடைந்தது.

சென்னை விமானநிலையத்தில் மீண்டும் சோதனையில் சிக்கிய அவரை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டதுடன் அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனா். விமானநிலையத்திலிருந்து வெளியேவந்த ராமன், விமானநிலையத்திலேயே தங்கினார். நேற்று மாலை 6. 30 மணிக்கு, குவைத் செல்லும் ஏா்இந்தியா விமானம் மூலம் மீண்டும் குவைத் செல்ல அவர் முடிவு செய்திருந்துள்ளார்.

அவரது திட்டப்படி, சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்குள் நுழைந்த அவர் தன்னிடமிருந்த பழைய பயணசீட்டை காண்பித்துள்ளார். அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா், பயணசீட்டை முழுமையாக பரிசோதனை செய்யாமல் அவரை உள்ளே அனுமதித்துள்ளார். அங்கிருந்து ஏர் இந்தியா கவுண்ட்டருக்கு சென்ற ராமன், தனது பழைய பயணசீட்டை கொடுத்து போர்டிங் பாஸ் கேட்டுள்ளார்.

அவருடைய பாஸ்போர்ட் மற்றும் பயணசீட்டை பரிசோதித்த ஏர் இந்தியா ஊழியர், அது காலாவதியான பயணசீட்டு என்றும் ராமன் குவைத் நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதையும் அவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் கவுண்ட்டரில் இருந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், விரைந்து வந்து ராமனிடம் விசாரணை நடத்தியபோது, அவா் பழைய பயணசீட்டை காண்பித்து, உள்ளே நுழைந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து ராமனை, பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமானநிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். பின்னர் ஆலந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ராமனிடம் தொடர் விசாரணை நடந்துவருகிறது. ஒரே பயணசீட்டின் மூலம் 2வது முறையாக பயணம் செய்ய முயற்சித்த ஆந்திர மாநில பயணியால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.