பேருந்துகட்டணம் அளவிற்கு விமானத்தின் டிக்கெட் அதிரடி குறைவு!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70 கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம், போக்குவரத்து தான் என்று கூறப்பட்டது. இதனால் சீனாவில் இருந்து வரும் வெவ்வேறு நாட்டிற்கு செல்லும் பயணிகள் அந்நாட்டு அரசால் தீவிரமாக கண்காணித்து வரப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
மேலும்,கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்க்க தேவையற்ற பயணத்தைத் தவிா்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களிலும் விமான பயணத்தை தவிர்க்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் விமான பயணத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகப்படியாக குறைந்துள்ளது.
இந்நிலையில் பல நாடுகளில் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும் கொரோனா அச்சுறுத்தல், உள்நாட்டு விமான சேவையிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு விமான கட்டணம் குறைந்து, தனியார் பேருந்து கட்டணம் போல் உள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் 1000 ரூபாய்க்கு குறைந்திருக்கிறது. வழக்கமாக கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் தற்போது டிக்கெட் கட்டணம் ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது இதுவே முதன்முறையாகும்.