4 வயது குழந்தையை கடத்தி ரூ.2.5 இலட்சத்திற்கு விற்ற கும்பல்.! பெற்றோர்களே உஷார்.!!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசிர்பாக் மாவட்டத்தில் வசித்து வந்த நான்கு வயது சிறுவன் கடந்த டிசம்பர் 18-ம் தேதி மர்ம கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். மகனை காணாது தேடியலைந்த பெற்றோர் அங்குள்ள காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல்துறையினர் சிறுவனை தீவிரமாக தேடிவந்ததை தொடர்ந்து, சிறுவன் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் சிறுவனை கடத்திய மர்மகும்பலுக்கு வலை வீசப்பட்டது. இந்நிலையில் சிறுவன் கடத்தப்பட்டு ஏழு நாட்களுக்கு பின்னர், அங்குள்ள கொதேர்மா மாவட்டத்தில் மீட்கப்பட்டார்.
குழந்தை இல்லாத தம்பதிகளாக வசித்து வந்த கீதாதேவி - ரோகித் ரவிதாஸ் ஆகியோருக்கு சிறுவன் ரூ.2.5 லட்சத்திற்கு கடத்தி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கடத்தல் கும்பலை சார்ந்த ஆறு பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாகவே பல இடங்களிலும் குழந்தை கடத்தல் சாதாரணமாக நடந்துவருகிறது. விற்பனை, உடல் உறுப்புகள் திருட்டு உள்ளிட்ட பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிப்பது அவசியமாகும்.