இரைதேடி வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை.. டி.வி மும்மரத்தில் கதறியோடிய குடும்பம்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், நஞ்சன்கூடு எடஹள்ளி கிராமம் வனப்பகுதி அருகே உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் இரவு நேரங்களில் உணவு தேடி கிராமங்களுக்குள் வந்து செல்வது வழக்கம். மேலும், அவ்வப்போது கால்நடைகளை வேட்டையாடியும் வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை எடஹள்ளி கிராமத்திற்குள் வந்துள்ளது. சிறுத்தை சென்னப்பா என்பவரின் வீட்டிற்குள் புகுந்த நிலையில், வீட்டில் அனைவரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். சிறுத்தையை கண்டவர்கள் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே வந்து கதவை தாழிட்டுள்ளனர்.
சிறுத்தை வீட்டினுள் அங்கும் இங்குமாக சுற்றிவந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஊர் முழுவதும் தெரியவர, கிராமமே அங்கு திரண்டு வந்து சிறுத்தையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.
வனத்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து ஜன்னல் வழியே சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, கூண்டில் அடைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் எடஹள்ளி கிராமத்தில் சிலமணிநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.