அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதம்.. சோகத்தில் ஓலா எடுத்த அதிரடி முடிவு..!
ஓலா நிறுவனம் தங்களது 1441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்ட நிலையில், சமீப நாட்களாக பல பகுதிகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் விபத்துகள் அரங்கேறியுள்ளது. இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வாகனங்களை திரும்பப்பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக ஓலா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "மார்ச் 26 ஆம் தேதியன்று புனேயில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட தொகுப்பில் நாங்கள் தயாரித்து விநியோகித்த ஸ்கூட்டர்களை முழு சோதனை நடத்த உள்ளோம். அதன்படி எங்களது நிறுவனத்தின் 1441 யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெற்று, ஸ்கூட்டர்கள் அனைத்தும் எங்களது சேவை பொறியாளர்கள் ஆய்வு செய்யப்படும்" என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஓலா நிறுவனம் மட்டுமல்லாமல் பிற நிறுவனங்களான ஓகினவா ஆட்டோடெக் ஆகிய நிறுவனங்களும் தங்களது 3000 வாகனங்களை திரும்பப்பெற்றுள்ளது. அதேபோல பியூர் இவி நிறுவனமும் 2000 வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.