ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதிரடி திருப்பம்: விஷம் கொடுத்து கொன்ற மந்திரவாதி உட்பட இருவர் கைது..!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவர்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
மராட்டிய மாநிலம், புனே அருகிலுள்ள சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மாய்சல் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக் எல்லப்பா (வயது 49). இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றியவர். மாணிக் எல்லப்பாவின் மூத்த சகோதரர் ஆசிரியர் போபட் எல்லப்பா (54).
கடந்த 15 நாட்களுக்கு முன்பு, இவர்களுடன் இவர்களது 74 வயது தாய், மனைவிகள், 4 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் 2 வீடுகளில் இருந்து உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் மராட்டிய மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்த. முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக இந்த குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். மேலும் கடனை வசூலிக்க இவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களில் 13 பேரை கைது செய்து இருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். தொடர்ச்சியாக நடந்த விசாரணையில் அதிரடி திருப்பமாக, எல்லப்பா குடும்பத்தினர் 9 பேரும் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
முதற்கட்டமாக, மந்திரவாதியான தீரஜ் சந்திரகாந்த் (39) மற்றும் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான அப்பாஸ் முகமது அலி பக்வான் என்பவர், எல்லப்பா குடும்பத்தினரிடம் இருந்து மறைக்கப்பட்ட புதையல் ஒன்றைக் கண்டுபிடித்து தருவதாக கூறி அவர்களிடமிருந்து ரூ.1 கோடி வாங்கியுள்ளார்.
மோசடி செய்து பணத்தை பெற்ற மந்திரவாதி புதையல் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இதன் காரணமாக, கொடுத்த பணத்தை அந்த குடும்பத்தினர் திரும்ப கேட்டதால், அவர்களை விஷம் வைத்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மாந்திரவாதியும், அவரது கூட்டாளியும் எல்லப்பா குடும்பத்தினரை சந்தித்து, மறைந்திருக்கும் புதையலைக் கண்டுபிடிக்க சில சடங்குகளைச் செய்வதாகக் கூறி, அவர்கள் குடும்ப உறுப்பினர்களை மொட்டை மாடிக்கு வரவழைத்துள்ளனர். அவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து, விஷம் கலந்த டீ-யை கொடுத்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.