மாணவி மீது ஆசிட் வீசிய விவகாரம்: பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!



womens-commission-issues-notice-to-flipkart-amazon-over

மேற்கு டெல்லி, உத்தம்நகர் அருகேயுள்ள மோகன் கார்டன் பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில்  பள்ளி மாணவி ஒருவர் தனது தங்கையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் அவர்களை பின்தொடர்ந்து வந்த இருவரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு டெல்லி காவல்துறையினருக்கு, மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், விசாரணையின் போது ஆசிட்டை பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத்தளத்தில் வாங்கியதாக கைதானவர்கள் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனை தளங்களுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆசிட் போன்ற பொருட்களை, அரசின் ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள் விற்பனையோடு இணைக்க அனுமதித்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள மகளிர் ஆணையம், ஆசிட்டை ஆன்லைனில் எளிதாக வாங்க முடிவது கவலைக்குரியது என்று கூறியுள்ளது.