திருமணத்தன்று ஓட்டம் பிடித்த மாப்பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பெண்வீட்டார்.!
கன்னியாகுமரியில் திருமண நாளன்று மாப்பிள்ளை திடீரென ஓட்டம் பிடித்ததால் பெண் வீட்டார்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மாப்பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பாலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பொறியியல் கல்லூரி பேராசிரியர் சோபினி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு இருவீட்டார் சார்பிலும் திருமண அழைப்பிதழ்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டது. கல்யாணம் வெகு விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அன்று நள்ளிரவு திருமண மாப்பிள்ளை திடீரென மாயமாகிவிட்டார். அவர் ரூமிற்கு சென்று பார்த்தபோது பெண்வீட்டார் அவர் அணிவித்த 9 பவுன் செயின் மட்டும் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி உள்ளார்கள். இறுதியாக அவரது பைக் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மாப்பிள்ளைக்கு திருமணம் பிடிக்கவில்லை என்று அனைவரும் ஊகித்தறிந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார்கள் ஓடிப்போன மாப்பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மீண்டும் அன்று மாலை வேட்டைக்காரன் பட பாணியில் வேறொரு மாப்பிள்ளையுடன் அந்தப் பெண்ணின் திருமணம் நடைபெற்றது.
இதனால் சதீஷின் உறவினர்கள் தக்கலை காவல் நிலையத்தில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காணாமல் போன சதீஷ் மீட்டுத்தர வேண்டும் என்றும் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தக்கலை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.