மக்களே உஷார்! UPI ஆப் மூலம் வங்கி கணக்கிலிருந்து மாயமாகும் பணம்; 6.8 லட்சத்தை இழந்த SBI வாடிக்கையாளர்
நொய்டாவை சேர்ந்த 30 வயது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து 6.8 லட்சம் ரூபாய் திடீரென மாயமாகி உள்ளது.
2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் திடீரென அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு "டிஜிட்டல் இந்தியா" என்ற வார்த்தை பரவலாக பிரபலமடையத் தொடங்கியது. இதனை முன்னிட்டு பல்வேறு UPI செல்போன் செயலிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் வெளியிடப்பட்டது. இந்த செயலிகளில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் நேரடியாக பதிவு செய்யப்பட்டு, பண பரிவர்த்தனைகள் எளிய முறையில் நடைபெறும் வண்ணம் உருவாக்கப்பட்டது.
வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் UPI ஆகும். அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (Unified Payments Interface). UPI இந்த வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.
UPI ஆனது வங்கி கணக்கின் விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வாடிக்கையாளரின் மெய்நிகர் முகவரி (mail id) மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ அனுமதிக்கிறது. இதில் பரிவர்த்தனை உங்களின் குளோபல் அட்ரஸ் (உங்களின் கைப்பேசி எண் அல்லது ஆதார் எண்) மற்றும் லோக்கல் அட்ரஸ் (மெய்நிகர் முகவரி) அடிப்படையில் நடக்கிறது.
இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த 30 வயது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து 6.8 லட்சம் ரூபாய் திடீரென மாயமாகி உள்ளது. இதனை அவர் டிசம்பர் 4-ஆம் தேதி தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க ஏடிஎம் சென்றபோதுதான் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எஸ்பிஐ வங்கி கிளையை அணுகியபோது கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி UPI ஆப் மூலம் ஏழு முறை அவருடைய வங்கி கணக்கிலிருந்து பிற வங்கி கணக்குகளுக்கு பண பணபரிவர்த்தனை செய்துள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
UPI ஆப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் அளவிற்கு அந்த வாடிக்கையாளரிடம் ஸ்மார்ட்போனே இல்லை என்பது ஆச்சர்யமான ஒன்று. மேலும் இந்த பரிவர்த்தனைகள் தொடர்பாக அந்த வாடிக்கையாளருக்கு எந்தவித SMS தகவலும் அவருடைய கைபேசிக்கு வரவில்லை. பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் அந்த வாடிக்கையாளர் புகார் அளித்தார். இந்த புகாரினை போலீசார் சைபர் கிரைம் பிரிவிற்கு அனுப்பிவைத்தனர்.
இதனை பற்றி விசாரணை செலுத்த அவர்கள், அவருடைய வங்கி கணக்கில் இருந்து பணம் எப்படி திருடு போயிருக்கும் என்பதை பற்றி விளக்கமளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "மொபைல் எண்களை கொண்டு பயன்படுத்தப்படும் UPI ஆப்களை ஹேக்கர்கள் மிகவும் எளிதாக தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுக்கு போலியான சிம் கார்டுகளை தயார் செய்து வாடிக்கையாளர்களின் உண்மையான மொபைல் எண்களுக்கு செல்லும் எஸ்எம்எஸ்களை தடுத்து விடுகின்றனர்.
பின்னர் அந்த போலியான சிம் கார்டுகள் மூலம் UPI ஆப்புகளை அவர்களுடைய மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து வங்கி வாடிக்கையாளர் வங்கிக் கணக்குடன் இணைத்து விடுகின்றனர். அதன் மூலம் அவர்களின் கணக்கிலிருந்து எளிதான முறையில் பண பரிவர்த்தனைகளை செய்துகொள்கின்றனர்".
இதனைக் கொண்டு புதிய வாடிக்கையாளர்களை மட்டுமல்லாமல் ஏற்கனவே UPI ஆப்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளையும் அவர்களால் கொள்ளையடிக்க முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் அடிக்கடி தங்களுடைய வங்கி கணக்குகளை சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.