பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வடை தெரியும் அது என்ன வாடா.? நாகூர் ஸ்பெஷல் இறால் வாடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.!!
தமிழ்நாட்டில் கிடைக்கும் உளுந்த வடையின் இன்னொரு பிறவி தான் வாடா. பொதுவாக வாடா இறால் வாடா. மஞ்சள் வாடா, தொப்பிவாடா, சூலிவாடா என மூன்று வாடாக்கள் மற்றும் சீனி வாடா எனும் இனிப்பு வாடாவும் உள்ளது. உளுந்த வடையை விட இதில் இருக்கும் கூடுதலான மொறுமொறுப்பும், வித்தியாசமான சுவையும் வேற லெவல் என்றே சொல்லலாம். உங்களுக்கு இந்த வாடா செய்ய தெரியவில்லையா? கவலையே வேண்டாம் கீழே இறால் வாடா எப்படி செய்யனும்னு ரெசிபி இருக்கு அதை பார்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப், சாதம் – 1 கப்,(வேகவைத்தது), ரவை – 4 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 1/4 லிட்டர், வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கியது), பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது), மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் – சிறிதளவு, இறால் அல்லது இறால் கருவாடு – தேவையான அளவு.
செய்முறை: முதலில் 1 கப் பச்சரிசி எடுத்து அதனை 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பின் ஒரு கப் வேகவைத்த சாதம் எடுத்து கொள்ளவும் (ஊறவைக்கும் அரிசி மற்றும் வேகவைத்த சாதம் சம அளவு எடுத்து கொள்ளவும்). பச்சரிசி ஊறிய பின் தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
பின் அதே போல சாதத்தையும் அரைத்து கொள்ளவும். பின் அரைத்து வைத்த சாதம் மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து மிக்ஸ் செய்து 4 – 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு புளித்த பிறகு 4 டேபிள் ஸ்பூன் ரவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 2 சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் 1, மஞ்சள் தூள் அரை டேபிள் ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். வதக்கிய பின்னர் அதன் மேல் கொத்தமல்லி இலையை தூவி வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்து கொள்ளவும். அதன் பிறகு ஒரு பேனில் தேவையான அளவு இறால், அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். இறால் கருவாடு இருந்தால் இந்த ஸ்டெப் செய்ய தேவையில்லை. இறால் கருவாடையே பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒரு பாலிதீன் கவர் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் தடவி அரைத்து வைத்திருக்கும் மாவை வடை போல தட்டி கொள்ளவும். பின் அதன் மேல் வதக்கி வைத்திருக்கும் இறாலை வைக்கவும் (இதே போல மீதம் இருக்கும் மாவையும் தட்டி கொள்ளுங்கள்) பின் ஒரு கடாயில் 1/4 லிட்டர் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு தட்டி வைத்திருக்கும் இறால் வாடாவை அதில் சேர்த்து கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான நாகூர் ஸ்பெஷல் இறால் வாடா தயார். இந்த இறால் வாடாவுடன் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.