சென்னையில் இப்படியும் ஒரு காவல் நிலையமா! அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்



policemen-celebrated-house-keeping-woman-birthday

சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் பெண்ணின் பிறந்தநாளை காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி பரிசுகளை அளித்து கொண்டாடியுள்ளனர். இந்த சம்பவம் பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அனுசியா(வயது 67) என்பவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று அனுசியாவுக்கு பிறந்தநாள் என்பதை அறிந்துகொண்ட காவலர்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நேற்று வழக்கம்போல் துப்புரவு பணிக்கு காவல் நிலையத்திற்கு வந்த அனுசியாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

palavanthangal

ஆய்வாளர் வெங்கடேசன் கேக் வாங்கிவரச் சொல்லி காவல் நிலையத்திலேயே அனைத்து உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் முன்னிலையில் அனுசுயாவின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். புடவையும் பரிசாக வழங்கினர். பலர் பணப்பரிசு வழங்கினர். வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஓரிடத்தில் பணியாற்றும் அன்புடன் அனுசுயாவின் பிறந்தநாளை காவலர்கள் மத்தியில் கொண்டாடியது நெகிழ்சியாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காவலர் ஒருவர் கூறியுள்ளதாவது: "நங்கநல்லூர் எம்ஜிஆர் நகரில் வசிக்கும் அனுசுயா காவல் நிலையத்தில் துப்புரவு பணிகளை கவனித்து வருகிறார். இவருக்கு கணவர் கிடையாது. ஒரு மகன் மட்டும் தான். அவரும் குடிபழக்கத்தால் தாயை கவனிக்கவில்லை. காலை, மாலை இருவேளை உணவு காவல் நிலையம் சார்பில் அவருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் மாதச் செலவுக்கு பணமும் கொடுக்கிறோம். நல்ல முறையில் நிலையத்தை தூய்மையாக வைத்திருப்பார். ஆய்வாளர் முதல் கடை நிலை காவலர் வரை அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் பேசுவார். குடும்பத்தில் ஒருவர் போல எங்களிடம் உரிமையுடன் பழகுவார். இதனால் அவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.