அ.தி.மு.க-வில் உச்சத்தை எட்டும் அதிகார சண்டை: சர்வாதிகாரம் தலைதூக்குவதாக ஓ.பி.எஸ் புலம்பல்..!



dictatorship-and-anarchy-are-currently-prevailing-in-th

அ.தி.மு.க-வில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு நிலவுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

அ.தி.மு.க-வில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது.  கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஒரு சில மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமை குறித்து பேசத் தொடங்கிய பிறகு உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் வருகிற 23 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதற்கிடையில் அ.தி.மு.கவினர் ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி என இரண்டி அணிகளாக பிரிந்து தங்களது பலத்தை நிரூபிக்கவும் அ.தி.மு.க தலைமை பொறுப்பை கைப்பற்றவும் பகீரத பிரயத்தனம் செய்துவருகின்றனர்.

அ.தி.மு.க-வின் பெரும் புள்ளிகள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால், அவரது பலம் கொஞ்சம் கூடியிருக்கிறது. மேலும் 72 மாவட்ட செயலாளர்களில் 60 பேருக்கு மேல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இணைச் செயலாளர் கேசவன் தீக்குளிக்க முயன்றதாக தகவல் அறிந்து வேதனையடைந்ததாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.