மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு- ஓ.பி.எஸ்.! சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது.. ஜெயகுமார் பதிலடி.!!



jayakumar talk about sasikala

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. அந்த பிளவுதான் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். 

இந்நிலையில், அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. சசிகலாவுடன் பேசிய அதிமுக-வினர் மீது கட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. மேலும், சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் அவ்வப்போது கருது தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'பாவத்தை சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்' என்ற இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டி தகவலை சொன்னார். அதாவது, தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு என்று தெரிவித்துள்ளார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக பன்னீர்செல்வம் சூசகமாக தெரிவித்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி அணியினர் கலக்கத்தில் உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மனித குலம் தோன்றியது முதல் தவறிழைத்தல் இயல்பு. ஆனால் திருந்தி வாழுவது மனித குலத்தின் சிறப்பு. ஆனால் சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்பதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உறுதியாகவே இருக்கிறார்கள். ஓபிஎஸ் கூறிய கதைக்கு கண் காது மூக்கு வைத்து உருவம் கொடுக்காதீர். அந்த கதை பாமரர்களுக்கே பொருந்தும், சசிகலாவுக்கு பொருந்தாது என பதிலளித்தார்.