மீண்டும் தொடங்கிய தர்மயுத்தம்!.. அ.தி.மு.க வை அபகரிக்க நினைத்தால் விடமாட்டேன்: கொக்கரித்த ஓ.பி.எஸ்..!



O. Panneerselvam has promised to defeat the attempt to usurp the AIADMK at the crossroads

எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உறுதிமொழி எடுத்தனர். 

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினமான இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது நினைவிடத்தை மலர்களால் அலங்கரித்திருந்தனர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அணியினர் வந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன்,  வெல்லமண்டி நடராஜன், மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, எம்.எல்.ஏ. மகிழன்பன், கொளத்தூர் கிருஷ்ன மூர்த்தி, டாக்டர்.சதீஷ், போன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

ஓ பன்னீர்செல்வம் எம்ஜிஆர் நினைவிடத்தில் வைத்து அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும். திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அந்த உறுதிமொழியில் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து தொண்டர்கள் இயக்கமான அதிமுகவை குறுக்கு வழியில் தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்க நினைக்கும் முயற்சியை வீழ்த்துவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.