பஞ்சரான பஞ்சாப்: மும்பையை கீழே தள்ளி 5 ஆம் இடம் பிடித்த ராஜஸ்தான்..!! உச்சகட்ட பரபரப்பில் ஐ.பி.எல்..!!



after-winning-their-66th-league-match-against-punjab-ra

பஞ்சாப் அணிக்கு எதிரான 66 வது லீக் போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 66 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற 66 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

மொத்தம் உள்ள 70 லீக் போட்டிகளில் இன்னும் 4 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் நேரடியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், எஞ்சியுள்ள 3 இடங்களுக்கான போட்டியில் முறையே சென்னை, லக்னோ, பெங்களூரு, ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங்-ஷிகர் தவான் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. ராஜஸ்தான் அணியின் மிரட்டலான பந்துவீச்சில் தடுமாறிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பிரப்சிம்ரன் சிங் 2, அதர்வா 19, தவான் 17, லியாம் லிவிங்ஸ்டன் 9 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் கைகோர்த்த சாம் கரண்-ஜித்தேஷ் சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த இணையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் 28 பந்துகளை சந்தித்து 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஷாருக்கான் அதிரடியில் மிரட்ட, பஞ்சாப் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து 188 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு யாஷ்வி ஜெய்ஸ்வால்-ஜோஸ் பட்லர் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. பட்லர் டக்-அவுட்டாகி வெளியேற, பின்னர் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பட்டையை கிளப்பினார். அணியின் வெற்றிக்கு வித்திட்ட இந்த ஜோடியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 30 பந்துகளில் 51 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்களிலும், ரியான் பராக் 20 ரன்களிலும் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அதிரடி காட்டிய சிம்ரன் ஹெட்மயர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 28 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வெற்றி பெறுவதற்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில், துருவ் ஜுரெல் மற்றும் டிரெண்ட் போல்ட் களத்தில் இருந்தனர்.

ராகுல் சஹர் வீசிய 20 வது ஓவரில், முதல் பந்தில் 2 ரன்களும், அடுத்த 2 பந்துகளில் தலா 1 ரன்னும் கிடைத்த நிலையில், 4-வது பந்தை தூக்கியடித்த துருவ் ஜுரெல் சிக்ஸர் விளாச ராஜஸ்தான் அணி இலக்கை எட்டி வெற்றியும் பெற்றது.  ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தை பிடித்த ராஜஸ்தான் அணி, மும்பை அணியை 6 இடத்திற்கு தள்ளியது. பெங்களூரு, ராஜஸ்தான், மும்பை அணிகள் தலா 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகளின் அடுத்த போட்டி முடிவுக்காக காத்திருக்கும் நிலைக்கு ராஜஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.