13 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற முதல் வெற்றி..!! சென்னை ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் மும்பையை வீழ்த்தியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 48 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெற்ற 49 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி தனது தொடக்க ஆட்டக்காரர்களை மாற்றியும் எந்தவித பலனும் இல்லை. அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் அதிக நேரம் நீடிக்கவில்லை. இளம் வீரர் வதோரா அந்த அணிக்கு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து 140 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் டெவன் கான்வே-ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அதிரடியான தொடக்கம் அளித்தது. இதன் மூலம் பவர்-ப்ளே ஓவர்களின் முடிவில் அந்த அணி வெற்றி பெறுவதை உறுதி செய்தது. இதன் பின்னர் மும்பை சுழற்பந்து வீச்சாளர்களின் போராட்டத்தால் வெற்றி சிறிது தள்ளிப்போனது.
அந்த அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து மும்பை அணியை வீழ்த்தியது. கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக சென்னை பெற்ற முதல் வெற்றியாக இது பதிவானது.
மும்பை அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 13 புள்ளிகள் பெற்ற சென்னை அணி புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை மைதானத்தில் மீண்டும் பெற்ற வெற்றியால் சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.