கோப்பையை வெல்லும் கனவில் இருக்கும் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்! தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி



pakistan beat england in 6th match

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் ஆறாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அதிர்ச்சியை கொடுத்துள்ளது பாகிஸ்தான் அணி.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் ஏற்கனவே கடந்த மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது. ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாத பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை பழிவாங்குமா என அனைவரும் எதிர்பார்த்தனர்.

wc2019

அதே சமயம் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி இந்த முறை சொந்த மண்ணில் உலக கோப்பை தொடரை விளையாடுவதால் கோப்பையை கைப்பற்றும் என பெரும்பாலானோர் கணித்துள்ளனர். பாகிஸ்தான் அணி கடைசியில் இங்கிலாந்துடன் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியுற்றது. மேலும் இந்த போட்டிக்கு முன்பு விளையாடிய 11 ஒரு நாள் போட்டிகளிலும் பாக்கிஸ்தான் அணி தோல்வியையே தழுவியது.

wc2019

இத்தகைய சூழலில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்பரஸ் அகமது ஆகியோர் அரை சதம் விளாசினர். இங்கிலாந்தின் கிறிஸ் மோரிஸ் மற்றும் மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து இமாலய இலக்கை எட்டி பிடித்து சாதனை வெற்றி படைக்கும் முனைப்பில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் இருந்தது. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே ஜேசன் ராய் அவுட்டானார். அவரை தொடர்ந்து பைர்ஸ்டோவ், மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் சொற்ப ரன்களில் அவுட் ஆக 22 ஓவரில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது.

wc2019

அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவருமே சதம் அடித்து அசத்தினார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 127 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 107 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 103 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பிறகு வந்த வீரர்கள் சரியாக ஆடாததால் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் வகாப் ரியாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

wc2019

உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அனைவராலும் கணிக்கப்பட்டு வரும் இங்கிலாந்து அணிக்கு இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேசமயம் தொடர்ந்து 11 போட்டிகளில் தோல்வியை தழுவி வந்த பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி மிகப் பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.